கனடாவின் மனிடோபாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் ஒற்றைக் கையில் கூடைப்பந்து விளையாட்டில் அபார திறமைகளை வெளிப்படுத்தி அசத்தி வருகின்றான்.
15 வயதான கய்ரன் டால்கீ என்ற சிறுவனே இவ்வாறு திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றான்.
பிரபல நட்சத்திர வீரர்கள் விளையாடும் ஆற்றலை பார்த்து அதனை பின்பற்றி இந்த மாணவன் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டுள்ளான்.

இந்த மாணவன் உயர்நிலைப்பள்ளி மற்றும் கழக மட்ட போட்டிகளில் ஏனைய வீரர்களுக்கு நிகராக களத்தில் இறங்கி திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார். கய்ரனுக்கு பிறவியிலேயே வலது கையின் ஒரு பகுதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
கூடைப்பந்தை கட்டுப்படுத்துவதற்கு இடது கையை முழுமையாக பயன்படுத்தி கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொண்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.
ஒற்றைக் கையில் எவரும் கூடைப்பந்தாட்டம் விளையாடி தாம் பார்க்கவில்லை எனவும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இவ்வாறு விளையாட்டில் திறமைகளை விருத்தி செய்து கொள்ள விரும்பியதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.