இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரில் இருந்து பங்களாதேஸ் வீரர் முஸ்தபிஜுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டார். இதனால் பங்களாதேஸில் பிரிமியர் லீக் தொடரை ஒளிபரப்பு செய்ய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இந்தியாவில் பிரிமியர் லீக் ‘டி-20’ தொடரின் 19வது தொடர் எதிர்வரும் மார்ச் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் நடந்தது. பங்களாதேஸ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மானை, 9.20 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியது.
பங்களாதேஸில் இந்தியாவுக்கு எதிரான மனநிலை காணப்படுகிறது. இதனால், முஸ்தபிஜுரை வாங்கிய கொல்கத்தா அணிக்கு எதிர்ப்பு கிளம்பியது. ‘பி.சி.சி.ஐ., அறிவுறுத்தலின்படி முஸ்தபிஜுர் விடுவிக்கப்பட்டார். பிரிமியர் தொடர் வரலாற்றில் முதன் முறையாக இதுபோன்ற சம்பவம் நடந்தது.
பங்களாதேஸ் வீரருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது, அந்நாட்டு மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
பங்களாதேஸ் இடைக்கால அரசின் விளையாட்டுத்துறைக்கான இடைக்கால ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் கடும் கண்டனத்தை பதிவிட்டார்.
அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ”எந்த சூழ்நிலையிலும் பங்களாதேஸ், கிரிக்கெட் வீரர்களும் அவமானம் அடைவதை ஏற்க மாட்டோம். அடிமைத்தனத்துக்கான காலம் முடிந்துவிட்டது” என கூறியிருந்தார்.
இந்நிலையில் பொதுமக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டதைக் காரணம் காட்டி மார்ச் 26ம் திகதி தொடங்கவிருக்கும் வரவிருக்கும் பிரிமியர் லீக் தொடரை ஒளிபரப்பு செய்ய பங்களாதேஸ் இடைக்கால அரசு தடை விதித்துள்ளது.



