பணிப்பெண்ணாக சவூதி அரேபியா வீடொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அந்த வீட்டிலிருந்த சிறுமிக்கு சூனியம் செய்து கொலை செய்தார் எனக்கூறி சவூதி நீதிமன்றம், அப்பெண்ணுக்கு மரண தண்டனை விதித்திருந்தது.
இலங்கை தூதரக அதிகாரிகள் தலையீடு
இந்த நிலையில் சவுதியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளின் தலையீட்டால், சிறுமியின் உடற்பாகங்களை இரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தியபோது சிறுமி புற்றுநோயால் இறந்ததாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

அதன்பின்னர் இலங்கை பெண் சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் கடந்த 16ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவிசாவலை, தல்துவ என்ற இடத்தைச் சேர்ந்த பாத்திமா என்ற 48 வயதான திருமணமாகாத பெண்ணே இந்த சம்பவத்தில் இருந்து தப்பித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டிலேயே அவர் வெளிநாடு சென்றுள்ளார்.

இலங்கை திரும்புவதற்கு தயாரானபோதே அவருக்கு இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த குற்றச்சாட்டிற்காக சில வருடங்கள் சிறை தண்டனையும் அனுபவித்துள்ளார். அதேவேளை குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு எந்தவொரு இழப்பீட்டு தொகையும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
