ஸ்பெயினில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச அளவாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை கடந்துள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக ஐரோப்பிய நாடுகள் வரலாறு காணாத அளவுக்கு கடும் வெப்ப அலையை எதிர்கொண்டுள்ளன.
இந்நிலையில் ஸ்பெயின் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச அளவாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை கடந்துள்ளது.
வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கத்தால் ஸ்பெயின் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஸ்பெயினில் வீசிய வெப்ப அலைக்கு கடந்த 10 நாட்களில் 1,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையத்தின் செய்தித் தொடர்பாளர் ஹெர்வெல்லா தெரிவிக்கையில்,
நாட்டின் பல பகுதிகளில் இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் கடந்துள்ளமையால், கடந்த 10 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையிலான 10 நாட்களில் 1,047 பேர் இறந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 672 பேர் 85 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், 241 பேர் 75 முதல் 84 வயதுக்குட்பட்டவர்கள், 88 பேர் 65 முதல் 74 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர்.
சுவாசம் மற்றும் இதய நோய்கள் உள்ளவர்களே அதிகளவில் இறந்துள்ளனர். இளைஞர்களிடையே முழுமையாக எந்தவித பாதிப்பும் காணப்படவில்லை என்று கூறினார். இது, ஸ்பெயினில் இந்தாண்டில் ஏற்பட்ட 2-வது பெரிய வெப்ப அலையாக கருதப்படுகிறது. முதல் வெப்ப அலை கடந்த மாதம் 11 ஆம் திகதி ஆரம்பித்து ஒரு வாரம் நீடித்தது. அந்த வெப்ப அலையினால், மொத்தம் 829 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.