சிங்களவர்களை கோபப்படுத்திப் பார்ப்பதற்கு முயற்சிக்கின்றனர் : சுமந்திரன்

0
722
tamilnews can not race culture Therefore Cultural Center setup

தான் தெரிவித்த கருத்தைத் திரிபுபடுத்தி வெளியிட்டதன் மூலம், பௌத்த மக்களைக் கோபப்படுத்திப் பார்ப்பதற்கு, சிலர் முயன்றுள்ளனர் என சுமந்திரன் எம்.பி குற்றம் சுமத்தியுள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில், புதிதாக பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படுவதைத் தடைசெய்ய வேண்டுமென, தான் கூறவில்லையெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இவ்விடயம் தொடர்பில், ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில், ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சுமந்திரன் எம்.பி, ஊடகச் சந்திப்பொன்றின் போது தான் கூறிய கருத்தைத் திரிபுபடுத்தி, வார இறுதிப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு தான் தெரிவித்த கருத்தைத் திரிபுபடுத்தி வெளியிட்டதன் மூலம், பௌத்த மக்களைக் கோபப்படுத்திப் பார்ப்பதற்கு, சிலர் முயன்றுள்ளனர் என்றும், சுமந்திரன் எம்.பி குற்றஞ்சாட்டினார்.

பௌத்த மக்கள் வாழாத பிரதேசங்களில், புத்தர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்வதால், எந்தப் பயனுமில்லை என்றே தான் கூறியதாகவும், அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறாக, பௌத்த மக்கள் வாழாத பிரதேசங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த புத்தர் சிலைகளில் பல, தற்போது அகற்றப்பட்டுள்ளன எனவும், இது விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாகவுமே, தான் ஊடகச் சந்திப்பில் தெரிவித்திருந்ததாக, அவர் தனதறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பொய்யான செய்திகளை வெளியிடுவதன் மூலம், மக்கள் மத்தியில் இன முரண்பாடுகள் தோற்றம்பெறுவதால், இச்சம்பவத்துக்கு எதிராக, தான் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும், சுமந்திரன் எம்.பி, மேலும் கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை