Trenton McKinley Revival
அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது டிரெண்டன் மெக்கின்லி என்ற சிறுவன், இழுவை வண்டியிலிருந்து கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயங்களுக்கு ஆளானார்.
இவ்விபத்து கடந்த மார்ச் மாதம் இடம்பெற்றிருந்தது. அவரின் மண்டையோட்டில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.அவர் மூளைச்சாவடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
டிரெண்டனைக் குணப்படுத்த முடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்ததைத் தொடர்ந்து, அவரின் உடலுறுப்புகள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்ட 5 பிள்ளைகளுக்குப் பொருத்தமானவையாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.அவரின் பெற்றோரும் அதற்கு ஒப்புக்கொண்டனர்.
அதனால், மகனின் உடலுறுப்புகளைத் தானம் செய்ய முடிவெடுத்தனர் டிரெண்டனின் பெற்றோர். அதற்கான பத்திரங்களில் கையொப்பமிட்டனர்.
உயிர்க்காப்புக் கருவியை அகற்றும் முன், டிரெண்டன் திடீரென்று சுயநினைவுக்குத் திரும்பும் அறிகுறிகள் தென்பட்டன.
டிரெண்டனின் பெற்றோர் இதை அதிசயமான நிகழ்வாகக் கருதுகின்றனர்.
தற்போது டிரெண்டன் மெதுவாகக் குணமடைந்து வருகிறார். அவரின் மற்ற சிகிச்சைகளுக்கு நிதி திரட்டப்பட்டு வருகிறது.
இச்சம்பவமானது மருத்துவ உலகையே அதிரச்செய்துள்ளது. மூளைச்சாவடைந்ததாக கூறப்பட்ட ஒருவர் உயிர்பிழைத்துள்ளமையானது பெரிய அதிசயமாக பார்க்கப்படுகின்றது.