கொரோனா வைரஸ் விந்தணுக்களின் தரத்தை குறைத்து, ஆண்களுக்கு கருவுறுதல் தன்மையை குறைக்கிறதாக சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது.
2019இல் சீனாவில் ஆரம்பமான கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் நிலையில் இதுவரை கிட்டத்தட்ட 2.2 மில்லியன் உயிர்களை பறித்துவிட்டது. 10 கோடிக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்து வருகின்றனர்.
இதுவரை வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களைகொரோனா வைரஸ் தாக்கும்போது அவர்களுக்கு தீவிர சுவாசப்பிரச்னை ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவித்துவந்த நிலையில் சமீபத்திய ஆய்வு மற்றொரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி, விந்தணுக்கள் உற்பத்தியாவதை தடுப்பதோடு, இனப்பெருக்க ஹார்மோன்களுக்கும் இடையூறு விளைவிக்கும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
அதாவது நுரையீரல் திசுக்களை அணுக கொரோனா வைரஸ் பயன்படுத்தும் ஏற்பிகள் விந்தணுக்களிலும் காணப்படுகின்றன எனவும், ஆனால் ஆண்களின் இனப்பெருக்கத்தின் இது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுகுறித்து இன்னும் தெளிவாகவில்லை என்கின்றனர்.
ஜெர்மனியில் உள்ள Behzad Hajizadeh Maleki and Bakhtyar Tartibian from Justus-Liebig என்ற பல்கலைக்கழகம் இந்த ஆய்வை சான்றுகள் மூலம் விளக்கியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 84 ஆண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் 60 நாட்களாக 10 நாள் இடைவெளியில் சோதனையை நடத்தினர்.
அந்த தரவுகளை ஆரோக்யமான நபர்கள் 105 பேரின் தரவுகளுடன் வைத்து ஒப்பீடு செய்ததில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்தணுக்களின் வீரியம் குறைந்து ஆண்மைத்தன்மை குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் விந்தணுக்களில் வீக்கம், ஆக்ஸிஜனேற்ற குறைபாடு, உடலின் புரதம் மற்றும் டி.என்.ஏக்களை சேதப்படுத்தக்கூடிய ரசாயன சமநிலையற்றை தன்மை போன்ற பிரச்னைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபற்றி ஆய்வாளர்களில் ஒருவரான மலேகி கூறுகையில், விந்தணு செல்களின் வீரியம் குறைந்து, கருத்தரித்தலுக்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருந்தது உறுதியாகி உள்ளது. மேலும் பாதிப்பு அதிகரிக்க அதிகரிக்க விந்தணுக்களில் மாற்றங்களும் அதிகரித்துக்கொண்டே இருக்கும் என்றார்.
மேலும், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் உறுப்புகளில் ஆண் இனப்பெருக்க உறுப்பு முக்கியமான ஒன்றாக இருப்பதை உலக சுகாதார நிறுவனமும் உறுதி செய்திருக்கிறது என்றார்.
இதுதொடர்பில் பிரிட்டனைச் சேர்ந்த மூத்த ஆராய்ச்சியாளர் ஆலிசன் கூறுகையில்,
இந்த ஆய்வில் மூத்த ஆராய்ச்சியாளர்கள் பெரிதளவில் ஈடுபடவில்லை. எனவே இந்த ஆய்வை தெளிவுப்படுத்தி உறுதிப்படுத்துவதற்கு முன்பு ஆண்களிடையே பயத்தை ஏற்படுத்துடுவது தேவையற்ற ஒன்று என்கிறார்.
ஆனால் இந்த விந்தணு வீரியம் குறைதல் என்பது எவ்வளவு நாட்களுக்கு என்பது குறித்த தெளிவான விவரங்கள் கிடைக்கவில்லை என்றும், எனவே இந்த ஆய்வு முடிவுகளில் மாற்றம் ஏற்படலாம் என மற்ற ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.