பேரறிவாளன் விடுதலை தொடர்பாக 7 நாளில் முடிவெடுக்க ஆளுநருக்கு உத்தரவு

0
549

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்க வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுக்காததால், பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தனது விடுதலை தொடர்பான குழப்பத்தை தெளிவுபடுத்த வேண்டும்

என, பேரறிவாளன் தரப்பில் நீதிபதி நாகேஸ்வர ராவிடம் முறையிடப்பட்டது. மத்திய அரசு தரப்பில், அடுத்த 2 தினங்களில் 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுப்பார் என தெரிவிக்கப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதி, இதுதொடர்பாக முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கப்படுவதாக உத்தரவிட்டார்.

பேரறிவாளன் விவகாரத்தில் நீதிமன்றம் எடுக்கும் முடிவில் எந்த ஆட்சேபனையும் இல்லை என, தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில், பேரறிவாளன் விடுதலை செய்யப்படவே அதிக வாய்ப்புள்ளதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க முடியாது என 2018ம் ஆண்டு அறிவித்த மத்திய அரசு, உச்சநீதிமன்றத்திலும் அதை தெளிவாக தெரிவித்துவிட்டதாகவும், அந்த உத்தரவை

எதிர்த்து இதுவரை யாரும் முறையீடு செய்யவில்லை என்றும் வழக்கறிஞர் தமிழ்மணி தெரிவித்துள்ளார்.

இந்திய குடிமகன்களை விடுவிக்கிறேன் என்றும், அதே நேரத்தில் இலங்கையைச் சேர்ந்தவர்களை விடுவிக்க முடியாது எனவும் ஆளுநர் உத்தரவு பிறப்பிக்கலாம் எனவும் வழக்கறிஞர் தமிழ்மணி குறிப்பிட்டார்.