போதைப் பொருள் கடத்தல்காரர்களை பாதுகாக்கும் அரசியல்வாதிகள் – அனுரகுமார அம்பலப்படுத்தும் ரகசியம்

0
544
tamil news government secure drug dealers anura revealed

(tamil news government secure drug dealers anura revealed)

ஒரு நாட்டின் அரசியல் வீழ்ச்சியடையும் போது சர்வாதிகாரியை கைக்காட்டி அழைக்கின்றனர் என்று ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும், சர்வாதிகாரியொருவர் நாட்டை முன்னேற்றியமைக்கான சான்றுகள் உலகில் எங்கும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை காத்து முன்னேற்றும் மக்கள் சார்பு ஆட்சி, மக்கள் சந்திப்பு வேலைத்திட்டத்தின் முதலாவது கூட்டம் ஊருபொக்கவில் நடைபெற்ற போதே அதில் உரையாற்றிய அனுராகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்தார்.

முன்னர் இரண்டு, மூன்று சிறிய உருண்டைகளாக விழுங்கி நாட்டுக்குள் போதைப்பொருள் கடத்தப்பட்டு வந்தது.

விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்து பேதி மாத்திரை சாப்பிட்டு அவற்றை வெளியில் எடுத்தனர்.

ஆனால், தற்போது போதைப்பொருட்கள் கொள்கலன் பெட்டிகளில் வருகின்றன. அன்று போல் அல்ல தற்போது போதைப்பொருள் கடத்தலில் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஆட்சியில் கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நிமால் லங்சா என்ற பிரதியமைச்சரின் வீட்டை அதிரடிப்படையினர் சுற்றிவளைத்தனர்.

அப்போது மகிந்த ராஜபக்ச ஹெலிக்கொப்டரில் நிமால் லங்சாவின் வீட்டுக்கு சென்று சுற்றிவளைப்புக்கு தடையேற்படுத்தி, நிமால் லங்சாவை பாதுகாத்தார்.

நீர்கொழும்பில் நிமால் லங்சாவை குடு லங்சா என்றே அழைப்பார்கள். அன்று மகிந்தவின் பாதுகாப்பை பெற்ற அவர், ரணிலின் பாதுகாப்பை பெற்று, மீண்டும் மகிந்தவுடன் இணைந்து கொண்டுள்ளார்.

கடந்த தேர்தலில் நுவரெலியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜனாதிபதி இருந்த மேடையில், உரையாற்றிய எஸ்.பி திஸாநாயக்க, நுவரெலியாவுக்கு ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு வருபவர் அமைச்சர் திகாம்பரம் என பகிரங்கமாக கூறினார்.

போதைப்பொருள் கடத்தல்களுக்கு பின்னால் இருப்பது அரசியல்வாதிகள் என்பது தெளிவானது. எதிர்கால சந்ததிக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை எப்படி பணத்தை சம்பாதிக்கலாம் என்று யோசிக்கும் அரசியல்வாதிகளே எமது நாட்டில் இருக்கின்றனர்.

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருப்போருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி கூறுகிறார். தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலையில் இருப்போருக்கு அங்கிருந்தவாறு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட முடியுமா?.

போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு மாத்திரமல்ல, பாதாள உலகக்குழுக்களுக்கு அரசியல்வாதிகள் பாதுகாப்பு வழங்குகின்றனர்.

கடுவல வசந்த என்பவர் ஒரு காலத்தில் பவித்ரா வன்னியாராச்சியிடம் இருந்தார். ஜூலம்பிட்டியே அமரே என்பவர் மகிந்த ராஜபக்சவிடம் இருந்தார்.

என்னிடம் புகைப்படம் ஒன்றும் இருக்கின்றது. நாமல் ராஜபக்ச இருக்கும் மேடையில் ஜூலம்பிட்டியே அமரே உரையாற்றுகிறார்.

எங்களது கூட்டத்தில் இரண்டு பேரை சுட்டுக்கொன்ற ஜூலம்பிட்டியே அமரே கைகளை பிடித்துக்கொண்டு நாமல் ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்குகிறார் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

(tamil news government secure drug dealers anura revealed)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites