இக்கட்டான நிலையில் உள்ள இலங்கைத் தமிழ் குடும்பம்: விசாரணை இன்று

0
1527
Sri Lankan Tamil Family Australia

Sri Lankan Tamil Family Australia

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படவுள்ள நிலையில் தடுப்புமுகாமில் வைக்கப்பட்டுள்ள நடேசலிங்கம்-பிரியா தம்பதிகளின் குடிவரவு வழக்கு இன்று மதியம் மெல்பேர்ன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மெல்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் முகாமிலிருந்து 4 காவலர்கள் சகிதம் இன்று நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட பிரியா, விசாரணைகளில் கலந்துகொண்டார்.

முன்னதாக, பிரியாவின் கணவர் மற்றும் 2 குழந்தைகளும் கூடவே நீதிமன்றத்துக்கு வருவதற்கான கோரிக்கையை முன்வைத்திருந்தபோதும் அது நிராகரிக்கப்பட்டதாக தமிழ் ஏதிலிகள் கழகத்தின் அரன் மயில்வாகனம் தெரிவித்தார்.

இன்றைய நீதிமன்ற அமர்வில், நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தினர் நாடு கடத்தப்படவேண்டிய கட்டாயம் என்ன என்பது குறித்த குடிவரவு சட்ட விதிகளை அரச தரப்பு வழக்கறிஞர் எடுத்துக்கூறினார்.

நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த நாடுகடத்தல் ஏன் தடுக்கப்படவேண்டும் என்றும் அவர்கள் ஏன் ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதிக்கப்படவேண்டும் என்றும் தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வழக்கு விசாரணைகளின் மீதான தீர்ப்பினை பின்னர் அறிவிப்பதாக அமர்வினை ஒத்திவைத்திருக்கிறார்.

நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தினர் தற்சயம் தடுப்புமுகாமில் வைக்கப்பட்டிருப்பதால், இந்த வழக்கு குறித்த முடிவினை பெற்றுக்கொள்வதற்கு அநேகமாக மீண்டும் நீதிமன்றத்துக்கு வரவேண்டிய தேவை இருக்காது என்றும் தபால் மூலம் அறிவிக்கப்படலாம் என்றும் வழக்கறிஞர்கள் வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.

இதேவேளை இன்று நீதிமன்ற விசாரணை நடைபெறுவதற்கு முன்பாகவும் விசாரணை நேரமும் நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தை இங்கே வாழ அனுமதிக்கவேண்டும் எனக்கோரி பேரணி ஒன்று மெல்பேர்ன் Flagstaff நடைபெற்றது.

புகலிடம்கோரி அவுஸ்திரேலியா வந்த நடேசலிங்கம்-பிரியா தம்பதி மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களின் 2 வயது மற்றும் 9 மாதக் குழந்தைகள் பல காலமாக Biloelaவில் வாழ்ந்து வந்த நிலையில், அவர்களது  bridging visa கடந்த தை – மாசி மாதமளவில் காலாவதியாகியிருந்ததையடுத்து, அவர்கள் நாடு கடத்தப்படும் நோக்கில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.