“இலங்கை பௌத்த நாடு”இதனை அழிப்பதற்கு இடமளிக்க முடியாது கோட்டாபயவிடம் முறையிட்ட மல்வது பீடம்

0
899
Gotabaya place Buddhist country Sri Lanka allowed destroy

யாழ்ப்பாணம் உட்பட தமிழர் பகுதிகளில் பௌத்தவிகாரைகளை அமைக்கவோ, புத்தர் சிலைகளை வைக்கவோ முடியாத நிலமைகள் காணப்படுவதாக சிங்கள பௌத்த தலைமை பீடம் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிடம் முறையிட்டுள்ளது. (Gotabaya place Buddhist country Sri Lanka allowed destroy)

அதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவர்களும் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மாணவர்களால் கடுமையான அழுத்தங்களுக்கு ஆளாகி இருப்பதாகவும் சிங்கள பௌத்த மக்களின் உயர் மத பீடங்களில் ஒன்றான மல்வது பீடத்தின் துணை மகாநாயக்கர் திம்புல்கும்புரு விமலதம்ம தேரர் அவரைச் சந்திக்க சென்ற முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிடம் முறையிட்டிருக்கின்றார்.

சிறிலங்காவில் நடைபெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றப் போவதாக கோட்டாபய ராஜபக்ச அண்மைக்காலமாக சூளுரைத்து வரும் நிலையிலேயே மல்வது பீடத்தின் துணைமகாநாயக்கர் திம்புல்கும்புரு விமலதம்ம தேரர் அவரிடம் இந்த முறைப்பாடுகளை செய்து நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்திருக்கின்றமை இங்குசுட்டிக்காட்டத்தக்கது.

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவின் இளைய சகோதரரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச கண்டிக்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது யூன் 15 ஆம் திகதியான நேற்றைய தினம் மல்வது பீட மகாநாயக்கத் தேரர் சிறி சுமங்கல தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து மல்வது பீடத்தின் சிரேஷ்ட துணைமகாநாயக்கத் தேரர் திம்புல்கும்பரே விமலதம்ம தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

மனைவியுடன் சென்றிருந்த கோட்டாபய ராஜபக்சவிடம், தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களவர்களும், பௌத்த பிக்குகளும் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருவதாக மல்வது பீடத்தின் சிரேஷ்ட துணைமகாநாயக்கத் தேரர் முறையிட்டார்.

“ இந்த நாடு பௌத்த நாடு. இதனை அழிப்பதற்கு இடமளிக்க முடியாது. ஏனெனில் எமது மதமும், சிங்கள இனமும் இரண்டரக் கலந்தவை. மரமும் மரத்தின் தோள்பட்டையையும் போல. அதற்காக வெறிபிடித்தவர்கள் போல் செயற்பட வேண்டும் என்று கூறவரவில்லை. ஆனால் அதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.ஏனெனில் வேறு நாடுகளிலோ, வேறு எங்குமோ சிங்கள இனமும், எமது மதமும் இல்லையே?. அதற்காக கிறிஸ்தவத்தையோ, இஸ்லாமையோ, இந்துமதத்தையோ ஓரம் கட்டிவிடுமாறு நாம் ஒருபோதும் கூறவில்லை. யாழ்ப்பாணத்தில் வாழ்பவர்கள் அவர்கள் தமக்குரிய விதத்தில் வாழ்கின்றனர். கிழக்கிலும் அப்படியே. எம்மால் யாழ்ப்பாணத்திற்கு சென்று பௌத்த விகாரையொன்றை அமைக்க முடியாதுள்ளது. புத்தர் சிலையை பிரதிஸ்டை செய்யவோ, பௌத்த தூபியை அமைக்கவோ எம்மால் முடியாது. ஆனால் புராதன காலத்தில் இவை அனைத்தும் அங்கு இருந்துள்ளன. இவற்றுக்கு ஆதாரங்களும் இருக்கின்றன.

தொல்பொருள் சான்றுகளும் கிடைத்திருக்கின்றன. ஆனால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எமது பகுதிகளுக்கு வந்து காணி வாங்க எந்தவொரு தடையும் இல்லை. பள்ளிவாசலொன்றை அமைக்கவோ, கோயிலொன்றை கட்டவோ எந்தவொரு தடையும் இல்லை.அதேபோல் வேலை செய்வதற்கும் தடைகள் இல்லை. கல்வி கற்பதற்கும் தடைகள் இல்லை.

ஆனால் எமது பிள்ளைகளுக்கு அங்கு பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. பௌத்த மக்களுக்கு மாத்திரமன்றி பௌத்த பிக்குகளுக்கும் பிரச்சனையாக இருக்கின்றது. இந்த நிலமைகள் காரணமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சிங்கள பிள்ளைகள் மிகவும் விரக்தியுடனேயே கல்வி கற்கின்றனர். அந்த அளவிற்கு அங்குள்ளவர்கள் சிங்கள மாணவர்களுக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றனர். வேறு பல பிரச்சனைகள்இருக்கின்றன.

ஆனால் இந்த பிரச்சனைகள் தொடர்பில் நாம் அனைவரும் மிகவும் உன்னிப்பாக இருக்க வேண்டும் என்பதை உங்களிடத்தில் நினைவு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இதனைஉங்களிடத்தில் மேற்கொள்ளும் முன்கூட்டிய அறிவித்தலாகவும் நான் கருதுகின்றேன்.

மைத்ரி – ரணில் தலைமையிலான தற்போதைய தேசிய அரசாங்கத்தின் கல்வி அமைச்சராக இருக்கும் அகில விராஜ் காரியவசம், பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் பாடங்களில் உள்ள பௌத்த மதம், இலக்கியம் மற்றும் வரலாறு தொடர்பான பாடங்களை நீக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் மல்வது பீடத்தின் சிரேஷ்ட துணை மகாநாயக்கர் விமலதம்ம தேரர் கோட்டாபயவிடம் தெரிவித்தார்.

சிங்கள பௌத்த நாட்டின் வரலாறு தொடர்பிலும்பௌத்த மதம் தொடர்பிலும் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்று வலியுறுத்திய துணை மகாநாயக்கர், இந்த நடவடிக்கைகள் தொடர்பில் நாட்டு மக்களை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோட்டாபயவிடம் கோரிக்கை விடுத்தார்.

“இந்த பௌத்த நாட்டில் சிங்கள நாட்டில் பௌத்த தர்மம் பௌத்த பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பதை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிந்தோம். அதேபோல் இலக்கியம், வரலாறு ஆகிய விடையதானங்களையும் இரத்துச் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். எமது முன்னோரான மன்னர்களின் விபரங்களை அறிந்து வளர்வதற்காகவே நாம் அவற்றை கற்றுக்கொள்ளவேண்டும் என்கிறோம்.

அதேபோல் நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் கூறவில்லை. அவற்றை கற்று அதன் மூலம் பாடங்களையும் நற் குணங்களையும் கற்றுக்கொண்டு சிறந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காகவே அவை தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று நாம் கூறுகின்றோம். அதனால் இந்த பாடங்களை இல்லாதொழிப்பது என்பது இந்த நாட்டிற்கும், இந்த மக்களுக்கும் பாரிய அழிவாகும்.

இந்த விவகாரம் எமக்கு பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. அதனால் முடிந்தால் இந்தத் திட்டங்கள் குறித்து ஆராய்ந்து அவற்றின் உண்மைத் தன்மையை நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு செய்வீர்களானால் சிறந்த செயலாக இருக்கும். என்று தெரிவித்துள்ளார்.

tags :- Gotabaya place Buddhist country Sri Lanka allowed destroy

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites