கனடாவின் பிரம்டன் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம் இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளமையை ஒன்ராரியோ மாகாணப் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இச்செயல் கனேடியத் தமிழர்களின் அடையாளம் மற்றும் வரலாற்றின் மீது நிகழ்த்தப்பட்ட நேரடித்தாக்குதலாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். கனடாவின் பிரம்டன் நகரில் நிர்மாணிக்கப்பட்டு கடந்த ஆண்டு மேமாதம் அந்நகர மேயர் பற்ரிக் பிரவுனால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவகம் இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு சேதப்படுத்தப்பட்ட தமிழின அழிப்பு நினைவகத்தின் புகைப்படங்களை தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ஒன்ராரியோ மாகாணப் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் இந்நடவடிக்கை குறித்துக் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
‘பிரம்டனில் உள்ள தமிழின அழிப்பு நினைவகம் சிதைக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த வேதனையையும் கோபத்தையும் அளிக்கிறது. இந்த நினைவகம் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான உயிர்களின் நினைவாக அமைக்கப்பட்ட ஒரு நினைவுச்சின்னமாகும்.
அத்தோடு கனடாவைத் தமது தாயகமாகக்கொண்டு வாழும் தப்பிப்பிழைத்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஆற்றுப்படுத்துவதற்கான ஒரு அடையாளமாகும்’ என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
ஒன்ராரியோவில் வெறுப்புணர்வுக்கும் இனவழிப்பு மறுப்புக்கும் இடமில்லை. தமிழர் வரலாற்றைப் பாதுகாப்பதிலும், தமது உறவுகளை நினைவு கூருவதற்கான தமிழர்களின் உரிமைக்கு மதிப்பளிப்பதிலும் நாம் உறுதியாக நிற்போம்’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



