மத்திய கிழக்கு நெருக்கடி; எகிறும் விமான Ticket விலைகள்!

0
26

மத்திய கிழக்கு போர் நெருக்கடி காரணமாக உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, வானூர்தி எரிபொருள் விலையும் பாரியளவில் உயர்ந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் வானூர்தி போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஒரு கலன் (Gallon) 2.25 அமெரிக்க டொலராக இருந்த வானூர்தி எரிபொருளின் விலை, தற்போது 4 டொலரைத் தாண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிகாட்டினார். வானூர்தி எரிபொருள் விலையேற்றம் வானூர்தி பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேசமயம் எரிபொருள் விலை அதிகரித்த போதிலும், ஏற்கனவே முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகளுக்கான கட்டணங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என பிரதி அமைச்சர் உறுதியளித்துள்ளார். இருப்பினும் புதிதாகப் பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுகளுக்கு அன்றைய சந்தை விலைக்கு ஏற்பவே கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கின் சில வான்பரப்புகள் இன்னும் மூடப்பட்டிருப்பதால் வானூர்தி பயணங்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளதனால் மேலதிக எரிபொருள் செலவை வானூர்தி நிறுவனங்கள் சுமக்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து குறுகிய காலத்திற்கு ஸ்ரீலங்கன் வானூர்தி சேவைக்கு சலுகை விலையில் எரிபொருள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சில வானூர்தி பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள அதேவேளை புதிய பயணங்களுக்கான கோரிக்கைகளும் அதிகரித்துள்ளன.

சில இடங்களுக்குச் செல்லும் போது அதிக பயணிகள் இருந்தாலும், திரும்பும் போது பயணிகள் குறைவாக இருப்பது போன்ற சவால்களையும் வானூர்தி நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ளன. எனவே தற்போதைய உலகளாவிய சூழலைக் கருத்திற்கொண்டு வானூர்தி நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு மேலும் தெரிவித்தார்.