கனடா பிரதமரை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்

0
29

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடிய பிரதமர் மார்க் கார்னியை மீண்டும் ஒருமுறை “ஆளுநர்” (Governor) என அழைத்து வம்புக்கு இழுத்துள்ளார். கனடாவை அமெரிக்காவின் ஒரு மாநிலம் போலச் சித்தரிக்கும் ட்ரம்பின் இந்தத் தொடர் கிண்டல், அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

செவ்வாய்க்கிழமை தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்ட ட்ரம்ப், ஆசிய கெண்டை மீன்களிடமிருந்து (Asian Carp) ‘மகா ஏரிகளை’ (Great Lakes) பாதுகாப்பது குறித்து அமெரிக்க மாநில ஆளுநர்களுடன் இணைந்து செயல்படுவது பற்றி குறிப்பிட்டிருந்தார்.

அதில், மார்க் கார்னியை “கனடாவின் வருங்கால ஆளுநர்” (Future Governor of Canada) என்று அவர் சாடியுள்ளார். மார்க் கார்னியை ட்ரம்ப் ஆளுநர் என அழைப்பது இது முதல் முறையல்ல.

கடந்த ஜனவரி மாதம், சீனாவுடனான கனடாவின் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பதிவிட்ட ட்ரம்ப், “ஆளுநர் கார்னி, கனடாவை சீனாவின் பொருட்களை அமெரிக்காவிற்குள் அனுப்பும் ஒரு தளமாக மாற்ற நினைக்கிறார்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதேவேளை, ட்ரம்பின் இந்தக் கிண்டல்கள் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் கார்னி, “யாரோ ஒருவர் பதிவிடும் ஒவ்வொரு ட்வீட் அல்லது கருத்துக்கு என்னால் பதில் சொல்ல முடியாது; இதை என்னால் கையாள முடியும்,” என நிதானமாகப் பதிலளித்துள்ளார்.

கடந்த 2025 அக்டோபரில் நடைபெற்ற ‘அமைதி உச்சிமாநாட்டின்’ போது, ட்ரம்ப் தவறுதலாக கார்னியை கனடாவின் “ஜனாதிபதி” (President) என அழைத்தார். அப்போது நகைச்சுவையாகப் பேசிய கார்னி, “என்னை ஜனாதிபதி பதவிக்கு தரம் உயர்த்தியதற்கு நன்றி” என்று கிண்டலாகக் கூறினார். அதற்கு ட்ரம்ப் சிரித்துக்கொண்டே, “பரவாயில்லை, நான் உம்மை ஆளுநர் என்று சொல்லவில்லையே” எனப் பதிலளித்திருந்தார்.