இலங்கையை அடுத்து குவைத் கடற்பரப்பில் எண்ணெய் தாங்கி கப்பல் மீது தாக்குதல்; அதிகரிக்கும் பதற்றம்

0
23

குவைத் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்றில் பலத்த வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பிரித்தானிய கடல்சார் பாதுகாப்பு அமைப்பான UKMTO தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கப்பலில் ஏற்பட்ட பலத்த வெடிப்பினைத் தொடர்ந்து அதன் ஒரு சேமிப்புத் தொட்டியில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடல் சூழலுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும் வெடிப்பைத் தொடர்ந்து கப்பலுக்குள் நீர் புகுந்துள்ள போதிலும், தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கப்பலில் இருந்த கடற்றொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் அந்த இடத்திலிருந்து சிறிய படகு ஒன்று வேகமாகத் தப்பிச் சென்றதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் கடந்த சில நாட்களில் வளைகுடா கடற்பரப்பில் வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களின் ஒரு அங்கமாக இது பார்க்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் முன்னெடுத்து வருகின்றனர். இப்பகுதி வழியாகப் பயணம் செய்யும் ஏனைய கப்பல்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன.