கடும் பனிக்குளிர் நிலவிய போதிலும், உலகின் இயற்கை அதிசயங்களில் ஒன்றான நயாகரா அருவி பகுதியளவில் உறைந்த காட்சியை காண திங்கள் கிழமை பெருமளவான சுற்றுலாப் பயணிகள் திரண்டனர். அருவியைச் சுற்றியுள்ள மரங்கள் உறைந்த நீர்த்துளிகளால் முழுவதும் பனிக்கட்டி போர்த்தப்பட்டுள்ளன.
அருவியின் அடிப்பகுதியில் மிகப்பெரிய பனிக் குவியல்கள் உருவாகியுள்ளன. இவ்வாறான பனிப்படர்வு ஒவ்வொரு ஆண்டும் நிகழ்வதில்லை. 2015க்கு பின்னர் காணப்படும் மிக அதிக பனிப்படர்வு இதுவாகும் என தெரிவிக்கப்படுகிறது.
“குறைந்தது கடந்த 10 ஆண்டுகளில் காணப்பட்ட சிறந்த பனிப்படர்வு நிலைமை இதுவாகும்” என நயாகரா பார்க்ஸ் கமிஷன் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் அடாம்ஸ் தெரிவித்தார். இந்த நிலைமை கடும் குளிர்காலம் மற்றும் பல வாரங்களாக நீடித்த துருவ குளிர் அலை (Polar Vortex) காரணமாக உருவானதாக அவர் விளக்கினார்.
நேற்று இரவு வெப்பநிலை மைனஸ் 20 பாகை செல்சியஸ் ஆக இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளே இப்போது நாம் காணும் பனிக்காட்சிக்கு காரணம் என அவர் கூறினார். இருப்பினும் நயாகரா அருவி முழுமையாக உறையவில்லை. குளிர்கால மாதங்களில் ஒரு நிமிடத்திற்கு சுமார் 85 மில்லியன் லிட்டர் நீர் அருவியாக பாய்கிறது.
அந்த அளவு நீர் முழுமையாக உறைவதற்கு இயலாததாகும். ஆனால் 1848 ஆம் ஆண்டில் ஒருமுறை பனிக் கட்டிகள் நீரோட்டத்தை 30 மணி நேரத்திற்கும் மேல் தடுத்து நிறுத்திய வரலாறும் உள்ளது. 1800களின் இறுதியில் அமெரிக்கா மற்றும் கனடாவை இணைக்கும் தற்காலிக பனிப்பாலம் உருவாகியிருந்தது. 1912 இல் ஏற்பட்ட உயிரிழப்புக்குப் பின்னர் அதில் நடப்பது தடை செய்யப்பட்டது.



