ஆசிய கிண்ணத்தை இந்திய அணி தலைவர் சூர்யகுமார் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம் – மோசின் நக்வி

0
24

2025 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற கிண்ணத்தை இந்திய அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ் நேரில் வருகை தந்து பெற்றுக் கொள்ள முடியும் என ஆசிய கிரிக்கெட் சபை தலைவர் மோசின் நக்வி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து இந்திய அணி வெற்றிக் கிண்ணத்தை பாகிஸ்தான் நாட்டு அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மற்றும் ஆசிய கிரிக்கெட் சபை தலைவருமான மோசின் நக்வியிடமிருந்து பெற முடியாது என தெரிவித்தது.

இந்திய அணி கிண்ணம் இல்லாமல் வெற்றியை கொண்டாடியது. இந்த நிலையில் ஆசிய கிண்ண இறுதிப் போட்டிக்கு பிறகு துபாயில் ஆசிய கிரிக்கெட் சபையின் ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.

இதில் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, இந்திய அணியின் வசம் கோப்பையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இந்த கூட்டம் அது தொடர்பானது அல்ல என மோசின் நக்வி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணிக்கு கிண்ணம் வேண்டுமானால் ஆசிய கிரிக்கெட் சபை அலுவலகத்துக்கு நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.