கனடாவில் இருந்து பிரிய விரும்பும் ஆல்பர்ட்டா மாகாண மக்கள்: பிரீமியர் திட்டம்

0
53

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக்க இருப்பதாக மிரட்டிக் கொண்டிருக்கும் நிலையில் கனேடிய மாகாணமொன்றின் மக்கள் அமெரிக்காவுடன் இணைய ஆதரவு தெரிவித்துள்ளது குறித்த செய்திகள் வெளியாகிவருகின்றன.

கனேடிய மாகாணமான ஆல்பர்ட்டாவில் சுமார் 30 முதல் 40 சதவிகித மக்கள் கனடா அரசு மீது அதிருப்தி கொண்டுள்ளதாக ஆல்பர்ட்டா மாகாண பிரீமியரான டேனியல் ஸ்மித் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் பிரிவினைக்கு ஆதரவான அமைப்பு ஒன்று கனடாவிலிருந்து பிரிவது தொடர்பில் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளது.

மக்கள் அந்த பிரேரணையில் கையெழுத்திட்டுவரும் நிலையில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் கையெழுத்திட்டால் அந்த பிரேரணை வாக்கெடுப்புக்கு வரும்.

அந்த பிரேரணை போதுமான கையெழுத்துக்களைப் பெறும் நிலையில் அதை அனுமதிப்பது என முடிவு செய்துள்ளார் ஆல்பர்ட்டா மாகாண பிரீமியரான டேனியல் ஸ்மித். காரணம் தான் அதை அனுமதிக்காவிட்டால் எதிர்க்கட்சியினர் அதை வைத்து அரசியல் செய்வார்கள் என்கிறார் அவர். 

இதற்கிடையில் ஒன்ராறியோ பிரீமியரான ஃபோர்ட் (Doug Ford) இது நாடு ஒன்றிணைவதற்கான நேரம், மக்கள், நாங்கள் நாட்டை விட்டு செல்கிறோம் என்று கூறுவதற்கான நேரம் அல்ல என்று கூறியுள்ளார்.

ஃபோர்டின் கருத்துக்கு பதிலளித்துள்ள ஸ்மித், நான் ஃபோர்டிடம் அவர் எப்படி அவரது மாகாணத்தை நடத்தவேண்டும் என்று கூறுவதில்லை. அவரும் நான் எப்படி எனது மாகாணத்தை நடத்தவேண்டும் என எனக்கு சொல்லமாட்டார் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார். நடப்பதையெல்லாம் பார்த்தால் ட்ரம்பின் பிரித்தாளும் சூழ்ச்சி வேலை செய்யத் தொடங்கிவிட்டதோ என்று தோன்றுகிறது.