உதடுகளில் உள்ள தோல், உடலின் மற்ற பாகங்களில் உள்ள தோலை விட மிகவும் மென்மையானது.
உதடுகளில் எண்ணெய் சுரப்பிகள் இல்லை என்பதால் எளிதாகவும், விரைவாகவும் வறட்சி அடையும்.
எனவே உதடுகளை கவனமாக பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.
உதடுகள் வறண்டு போகும்போது நாக்கினால் அவற்றை அடிக்கடி ஈரப்படுத்துவது, உதடுகளில் தோல் உரிவதற்கு முக்கியமான காரணமாகும்.
இதுமட்டுமில்லாமல் வைட்டமின் ‘டி’ குறைபாடு, உடலில் நீர்ச்சத்து குறைவது, உதடுகளில் அதிகப்படியான சூரிய ஒளி மற்றும் குளிர்ந்த காற்று படுவது, ரசாயனம் கலந்த உதடு பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவது, வாய் வழியாக மூச்சு விடுவது, காலநிலை மாற்றம், உடலின் வெப்பநிலை அதிகரிப்பது போன்ற காரணங்களாலும் உதடு வறண்டு தோல் உரிதல் ஏற்படும்.
உதடுகளில் தோல் உரிவதைத் தடுக்க, அடிக்கடி அவற்றை நாக்கால் ஈரப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இரசாயனம் கலக்காத, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட உதடு பராமரிப்பு பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
உதடுகளில் படியும் இறந்த செல்களை அவ்வப் போது நீக்கினால் உதடுகள் மென்மையாகவும், இயற்கையான நிறத்தோடும் இருக்கும்.
சிறிதளவு சர்க்கரையுடன் தேன் சேர்த்து நன்றாகக் கலந்து உதடுகளில் பூசவும். பின்பு விரல்களைக் கொண்டு வட்ட இயக்கத்தில் உதடுகளில் மென்மையாக மசாஜ் செய்யவும்.
பின்பு அதை சுத்தம் செய்துஉதடுகளில் தேங்காய் எண்ணெய் பூசவும். வாரத்தில் ஒருமுறை இவ்வாறு செய்வதால் உதடுகள் மென்மையாக இருக்கும்.
உதடுகளுக்கு வாசனையில்லாத, ஒவ்வாமை ஏற்படுத்தாத லிப் பாம் உபயோகிப்பது சிறந்தது.
கிளிசரின் மற்றும் ஆமணக்கு எண்ணெய் சேர்த்த லிப் பாம்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.
வாசனை திரவியங்கள் மற்றும் சுவையூட்டும் மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்ட லிப் பாம்களை தவிர்ப்பது நல்லது.
மென்தால், யூகலிப்டஸ், மெழுகு சேர்த்த லிப் பாம்கள் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
ரசாயனங்கள் கலந்த லிப் பாம்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, தேங்காய் எண்ணெய், வெண்ணெய், பெட்ரோலியம் ஜெல் ஆகியவற்றை உதடுகளில் பூசி வரலாம்.
உதடுகளில் வெடிப்புகள் ஏற்படாமல் இருக்க, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இளநீர், மோர், வெள்ளரிக்காய் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும்.
தினமும் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ணவுகளை சாப்பிட வேண்டும்.
காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். லிப் பாம்,
உதடுகளில் ஏற்படும் வெடிப்புகளை குணப்படுத்தும். நீண்ட நேரம் உதடுகளை நீரேற்றமாகவும் வைத்திருக்கும்.
வீட்டை விட்டு வெளியே செல்லும் நேரங்களில், இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை லிப் பாம் பூசுவது நல்லது.