ஆக்ஸ்போர்ட் (oxford) பல்கலைக்கழக அச்சகம் ஆக்ஸ்போர்ட் (oxford) ஆங்கில அகராதியில் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த வார்த்தையாக ரிஸ் (Rizz) என்ற வார்த்தையை தேர்வு செய்துள்ளது. சிறந்த வார்த்தை தேர்வுக்காக இறுதியாக பட்டியலிடப்பட்ட 8 வார்த்தைகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்த 8 வார்த்தைகளும் 2023ல் மக்களின் மனநிலை, ஆர்வம் மற்றும் அக்கறைகளை பிரதிபலிக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டன. இவற்றில் சிறந்த வார்த்தையாக ரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதற்கான இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பு, ஆக்ஸ்போர்டு அகராதியியலாளர்கள் பொது வாக்கெடுப்பு நடத்தினர். அடிக்கடி சுற்றுலாப் பயணத்தை மேற்கொள்ளும் நபர்கள் இந்த ரிஸ் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கலாம்.
காதலை வெளிப்படுத்துதல் அல்லது கவர்ச்சிக்கான இணைய மொழியாக பெரும்பாலும் இளைஞர்களால் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. கடந்த 12 மாதங்களில் இந்த வார்த்தை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்ட் (Oxford) அகராதியின் விளக்கம்
ஸ்டைல், வசீகரம் அல்லது கவர்ச்சி; காதல் அல்லது பாலியல் துணையை ஈர்க்கும் திறன். சுருக்கமாக, இது ‘கரிஸ்மா’ (charisma) என்ற வார்த்தையின் மையப்பகுதி. ரிஸ் என்பதை ஒரு வினைச்சொல்லாகவும் (Verb) பயன்படுத்தலாம்.
அதாவது யாரையாவது கவர்ந்திழுப்பது, மயக்குவது அல்லது ஜாலியாக அரட்டையடிப்பதற்கான வாக்கியத்தில் “to rizz up” போன்ற சொற்களை பயன்படுத்தலாம்.