இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியில் எஞ்சலோ மெத்யூஸ் ‘Time Out’ (டைம் அவுட்) முறையில் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்து வெளியேறியமை உலக கிரிக்கெட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த விடயமாக இருந்தது.
எஞ்சலோ மெத்யூஸ் ஆடுகளத்துக்கு வந்து உரிய நேரத்துக்குள் (2 நிமிடங்கள்) ஸ்டம்புக்கு வராததால் அவர் ‘Time Out’ முறையில் Run out வீரராக அறிவிக்கப்பட்டார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் இதுபோன்ற ஆட்டமிழப்பு இடம்பெறுவது இதுவே முதல்முறை. 146 வருட வரலாற்றைக் கொண்ட சர்வதேச கிரிக்கெட்டில் டைம் அவுட் செய்யப்பட்ட முதல் துடுப்பாட்ட வீரராக எஞ்சலோ மெத்யூஸ் பதிவாகியிருந்தார். போட்டி விதிமுறைகளின் பிரகாரம் ஒரு வீரர் தனது இன்னிங்ஸை 2 நிமிடங்களுக்குள் தொடங்க வேண்டும்.
எஞ்சலோ மெத்யூஸ் துடுப்பெடுத்தாட ஆடுகளம் வந்தபோது அவரது ஹெல்மெட்டின் பட்டி கழன்றதால் மாற்று ஹெல்மெட் கொண்டு வரப்படும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. இந்த தாமதத்தின் போது பங்களாதேஷ் அணியின் தலைவர் ஷேக்கிங் மேல்முறையீடு செய்ய நடுவர்கள் பங்களாதேஷுக்கு சாதகமாக தீர்ப்பளித்தனர்.
ஒரு வீரர் ஆட்டமிழந்த 3 நிமிடங்களுக்குள் அடுத்த வீரர் பந்தை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று MCC சட்டம் கூறுகிறது. ஆனால், ஐசிசி உலகக் கோப்பை 2023 விளையாட்டு நிலைமைகளின்படி, துடுப்பாட்ட வீரருக்கான நேர வரம்பு 2 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
2007ஆம் ஆண்டு கேப்டவுனில் தென்னாப்பிரிக்காவுடன் நடைபெற்ற டெஸ்டில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழந்த பின்னர் அடுத்த வீரராக வி.வி.எஸ்.லக்ஷ்மண் ஆடுகளத்துக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் நேர தாமததால் அவர் ஆடுகளம் வரவில்லை. அவருக்கு பதிலாக சௌரவ் கங்குலி ஆடுகளத்துக்கு வந்திருந்தார்.
கங்குலி ஆடுகளத்துக்கு வர மூன்று நிமிடங்களுக்கு மேல் தாமதமாகியிருந்தாலும் அப்போது தென்னாபிரிக்க வீரர்கள் ‘Time Out’ முறைப்படியான ஆட்டமிழப்பை கோரவில்லை.
அவ்வாறு கோரியிருந்தால் ‘Time Out’முறைப்படி ஆட்டமிழந்த முதல் வீரராக சௌரவ் கங்குலி பதிவாகியிருப்பார். நேற்றைய தினம் மெத்யூஸின் ஆட்டமிழப்பு 16 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகளை மீண்டும் கிரிக்கெட் ரசிகர்களிடையே கொண்டு வந்திருந்தது.
தென்னாபிரிக்க அணியின் அப்போதைய தலைவர் கிரேம் ஸ்மித் இதற்கு மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் கங்குலியின் ஆட்டமிழப்பு தவிர்க்கப்பட்டது.
மெத்யூஸின் ஆட்டமிழப்பு சம்பவம் சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக இருந்தாலும் முதல்தர கிரிக்கெட்டில் துடுப்பாட்ட வீரர்கள் இவ்வாறு ‘Time Out’முறைப்படி ஆட்டமிழந்துள்ளனர்.