அடுத்த ஆறு மாதங்கள்: அரசாங்கத்துக்கு சவாலான காலம் – பாரத் அருள்சாமி

0
42

அரசியல் கலாச்சாரத்தின் மீது மக்கள் கொண்ட வெறுப்பு மற்றும் நாட்டின் ஸ்திரத்தன்மையை நோக்காக கொண்ட அடிப்படை எதிர்பார்ப்பின் அலை தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை உறுதி செய்தது. அதனால் அரசாங்கத்திற்கு எம்மக்களது பிரச்சினைகள் தொடர்பில் பாரிய பொறுப்பும் உள்ளது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளையும் அரசியல் தலைமைகளின் குறைகளையும் சுட்டிக்காட்டிக் கொண்டு காலத்தை வீணடிக்காமல் ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளை அரசாங்கம் துரித கதியில் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உறுப்பினர் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கிடையிலேயான ஒப்பந்தத்திற்கு இணக்கப்பாடு வந்துள்ள நிலையில் மூன்றாம் கட்ட நிதி உதவி நிறைவு செய்யப்பட்டு நான்காம் கட்ட நிதி உதவிக்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஏதுவாக அமையகூடிய காரணியாகும். எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் ஜூன் மாதத்துக்கு இடையிலான காலப்பகுதி அரசாங்கத்திற்கு மிகவும் சவாலான காலப்பகுதியாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது மீளாய்வு மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் எதிர்வரும் வரவு – செலவு திட்டத்தில் அரசாங்கம் உறுதியளித்த அனைத்து விடயங்களையும் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள், மாகாண சபைத் தேர்தல்கள் அரசியலமைப்பின் மாற்றங்கள் போன்ற நாட்டின் நிர்வாக கட்டமைப்புகளிலும் பல மாற்றங்கள் ஏற்படவுள்ள நிலையில் இக்காலப்பகுதியில் வழமையான நொண்டி சாக்குகளை சொல்லாமல் அரசாங்கம் செயல்படும் என நான் நினைக்கின்றேன்.

அதேபோன்று மலையக மக்கள் அரசாங்கத்தின் மீது பாரிய எதிர்பார்ப்பினை வைத்தே தமது வாக்குகளை அளித்துள்ளனர். மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்தல், அவர்களுக்கான கல்வி அபிவிருத்தி, காணி உரிமை என்பன அரசாங்கத்தினால் உறுதி செய்யப்பட வேண்டும். அதற்கான தொடர் அழுத்தங்களை நாம் அனைத்து தரப்பினருடனும் இணைந்து வழங்குவோம் என்றார்.