சில அரசியல்வாதிகள் மாவீரர்களையும் வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு (Batticaloa) – குருமண்வெளியில் வரவேற்பு நிகழ்வொன்று நேற்றையதினம் (24.11.2024) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இம்மாதம் 27ஆம் திகதி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்களோடு மக்களாக இருந்து நாங்களும் செயற்படுவோம்.
பலர் மாவீரர் குடும்பங்களை கௌரவிப்புச் செய்கின்றோம் என பலரிடம் பணம் பெற்றுள்ளார்கள் இதில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
அரசியல்வாதிகளாக உள்ள நாங்கள் செய்ய வேண்டிய பணி அஞ்சலி நிகழ்வுகளை செய்யும்போது மக்களுக்கு அச்சுறுத்தல்கள் வருமாக இருந்தால் நாங்கள் அதை தட்டிக் கேட்க வேண்டும்.
தனி நாட்டுக்காக போராடிய ஒரு இனம் அந்தப் போராட்டத்திற்காக வாழ்க்கை அர்ப்பணித்தவர்களுக்கு நாங்கள் செய்ய வேண்டிய நன்றிக்கடன் இந்த நாட்டிலே தமிழ் மக்களுக்காக அரசியல் தீர்வு ஒன்றினை கோரிபயணிப்பது மட்டும்தான்.
அரசியல் தீர்வு வந்தால் மாத்திரம் தான் இந்த நாட்டிலே எமது தமிழ் மக்கள் உரிமையோடு கௌரவமாக தலைநிமிர்ந்து வாழலாம். இந்த நாட்டில் அரசியல் தீர்வு வந்தால் மாத்திரம்தான்நாங்கள் விரும்பும் தேவைகளை செய்து கொள்ளலாம்.
இல்லையேல் தென்னிலங்கை அரசாங்கம் போடும் பிச்சையிலே தான் வாழ வேண்டும். மேலும் எனக்கும் மக்கள் வாக்களித்த காரணம் என்னுடைய செயல்பாடு வைத்துதான் 65,000 வாக்குகள் என்பது ஒரு வரலாற்று சாதனையாகும்.
இந்த சாதனையை புரிந்த குருமண்வெளி மக்கள் உள்ளிட்ட மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்” என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.