மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி: அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு

0
45

தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிப்பதற்கு எந்த வித தடையும் கிடையாது, அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும் என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்தார்.

யாழில் தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் மக்கள் மாவீரர் தினத்தை இம்முறை எவ்விதமான கெடுபிடிகளும் அடக்குமுறைகளும் இல்லாமல் அனுஷ்டிக்க முடியும்.

அதற்கு எந்தவிதமான தடையும் கிடையாது. மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களை ஒளிப்படம் எடுக்க வேண்டாம் என பாதுகாப்புத் தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே மக்கள் சுதந்திரமான முறையில் மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க முடியும். அது அவர்களின் உரிமை. அதற்கு அரசு தடை எதுவும் போடாது“ என தெரிவித்தார்

இதேவேளை தமிழின விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு தமிழர் தாயகமெங்கும் மாவீரர் வாரத்தின் இறுதி நாளான கார்த்திகை 27ஆம் நாள் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.