மறுப்பு தெரிவித்த கனடா அரசு: 14 இந்திய தூதரக முகாம்கள் மூடப்பட்டன

0
19

கனடாவில் இந்திய தூதரகங்கள் ஏற்பாடு செய்திருந்த முகாம்களுக்கு பாதுகாப்பு வழங்க அந்நாட்டு அரசு மறுத்துள்ளது. இதனால் டொரன்டோ, வான்கூவர் உள்ளிட்ட நகரங்களில் நடைபெறவிருந்த 14 சிறப்பு முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்திய கனேடிய உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

கனடாவை சேர்ந்த காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலை வழக்கில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா அரசு குற்றம் சுமத்தி வருகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் இரு நாடுகளும் கடந்த மாதம் தூதரக அதிகாரிகளை வெளியேற்றின.

காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக வன்முறையை ஏற்படுத்துவதற்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டமிட்டுள்ளார் என கனடா அமைச்சர் டேவிட் மோரிசன் சில நாட்களுக்கு முன்பு குற்றம் சுமத்தினார்.

குற்றசாட்டுக்களை மறுத்த இந்தியா டேவிட் மோரிசனின் குற்றச்சாட்டுக்கு மத்தியஅரசு கடும் கண்டனம் வெளியிட்டது. கனடாவில் சுமார் 20 இலட்சம் இந்தியர்கள் வாழும் நிலையில் மத்திய அரசில் பணியாற்றிய பலர் ஓய்வுக்கு பின்னர் கனடாவில் குடியேறியுள்ளனர்.

அவர்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க கனடாவில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்கள் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவது வழக்கம்.

இதன்படி கனடாவின் டொரன்டோ மாகாணம் உட்பட்ட பிராம்ப்டன் நகரில் உள்ள இந்து சபா கோயில் வளாகத்தில் அண்மையில் இந்திய தூதரகம் சார்பில் ஓய்வூதியதாரர்களுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அப்போது கோயில் பக்தர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் மீதும் காலிஸ்தான் தீவிரவாத குழுவினர் தாக்குதல் மேற்கொண்டனர்.

இந்நிலையில் டொரன்டோ, வான்கூவர், பிராம்ப்டன், வின்னிபெக் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஓய்வூதியதாரர்களுக்காக 14 சிறப்பு முகாம்களை நடத்த இந்திய தூதரக அலுவலகங்கள் ஏற்பாடு செய்திருந்தன. நவம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை இந்த முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

காலிஸ்தான் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக இந்திய தூதரகங்கள் ஏற்பாடு செய்துள்ள முகாம்களுக்கு கனடா அரசிடம் பாதுகாப்பு கோரப்பட்டது. கடனா அரசு அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் ஓய்வூதியதாரர்களுக்கான 14 சிறப்பு முகாம்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.