டொனால்ட் ட்ரம்ப் மீள் வருகை: உலக அரசியல் ஒழுங்கும் இந்தியாவும்

0
48

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம் வெற்றி பெற்றதும் உலக அரசியல் ஒழுங்கு தொடர்பான விவகாரங்கள் தொடர்பாக உலக அரங்கில் பல்வேறு விடயங்கள் பேசப்படுகின்றன. முக்கியமாக அரசியல் – பொருளாதார முறைகளில் ஏற்படவுள்ள “தாக்கங்கள்” ”மாற்றங்கள்” பற்றி பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ரசிய – உக்ரெயன் மற்றும் இஸ்ரேல் பலஸ்தீன மோதல்களினால் உலக அரசியல் ஒழுங்கு கடந்த இரண்டு வருடங்களாகக் குழப்பியிருக்கும் பின்னணியில் ட்ரம்பின் வருகை எத்தகைய தாக்கத்தைச் செலுத்தும் என்ற கேள்விகளும் சந்தேகங்களும் விஞ்சியுள்ளன.

அதுவும் இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் சீன ஆதிக்கத்தை தடுக்க உருவாக்கப்பட்ட குவாட் இராணுவ அணியில் இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் ரசிய -சீன அரசுகளை மையப்படுத்திய பிறிக்ஸ், ஆர்சிஇபி எனப்படும் ஆசியான் நாடுகளை உள்ளடக்கிய பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு (Regional Comprehensive Economic Partnership) (RCEP) போன்ற பொருளாதார இயங்குதளங்கள் பற்றிய கேள்விகள் உண்டு.

ஏனெனனில் குவாட் அமைப்பின் செயற்பாடுகளில் அமெரிக்காவுக்குச் சார்பான இந்தியாவின் செயற்பாடுகள் கூடுதலாக உண்டு. அதேநேரம் பிறிக்ஸ் பொருளாதார கட்டமைப்பில் சீன – ரசிய அரசுகளுக்குச் சார்பான முறையில் இந்தியாவின் பங்களிப்பு பிரதானமாகவுமுள்ளது.

ஆனால் ஆர்சிஇபி என்ற பொருளாதார வலையமைப்பில் இந்தியா இல்லை. ஆனால் அந்த வலையமைப்பில் இணைவதற்கு இலங்கை கடந்த ஆண்டு யூன் மாதம் விண்ணப்பித்துள்ளது. சீன அரசின் ஆதரவையும் கோரியுள்ளது. ஆர்சிஇபியில் இந்தியா இல்லை. இருந்தாலும் அதில் இணையக்கூடிய வாய்ப்பை சீனா இந்தியாவுக்கு வழங்கியுள்ளது.

ஆர்சிஇபி 2021 இல் உருவாக்கப்பட்டபோது அது பற்றிய பேச்சுக்களில் சீனா – ரசிய போன்ற நாடுகளுடன் இந்தியா பேச்சில் ஈடுபட்டுமிருந்தது. ஆனால் பிறிக்ஸ் பொருளாதார கூட்டுக்குள் இந்தியா இருப்பதுதான் அமெரிக்காவுக்குப் பிரச்சினை. தற்போது டொனால்ட் ட்ரம் வெற்றி பெற்றதால் இந்திய நிலைப்பாடு தொடர்பான கேள்விகள் அதிகரித்துள்ளன.

ஏனெனில் இந்தியா இதுவரை நாளும் சர்வதேச விவகாரங்களில் குறிப்பாக இந்தோ – பசுபிக் பிராந்திய விவகாரம் மற்றும் ரசிய – உக்ரெய்ன் போர் போன்ற விடயங்களில் இந்தியா தனது உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. இஸ்ரேல் பலஸ்தீன போரிலும் இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவான போக்கையே கடைப்பிக்கிறது.

ஆனால் இந்தியப் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான ட்ரம் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ள நிலையில், இந்திய நிலைப்பாடு முழுமையாக அமெரிக்காவை மையப்படுத்திய மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சாதகமான முறையில் அமையக்கூடிய ஏது நிலைகள் இல்லாமலில்லை.

2016 ஆம் ஆண்டு முதற் தடவையாக ட்ரம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற நாள் முதல் 2020 வரை இந்திய அரசுடன் நெருக்கமான உறவை பேணியிருந்தார். குறிப்பாக இந்தோ – பசுபிக் விவகாரம் தொடர்பான குவாட் இராணுவ அணியின் தலைமைப் பொறுப்புக் கூட இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருந்தது.

சீனாவுக்கு எதிரான குவாட் கூட்டு இராணுவ அணியில் இந்தியாவின் செயற்பாட்டுக்கு 2020 இல் முக்கியமளித்திருந்த சூழலில் கொவிட் நோய்த் தாக்கம் உலகில் ஏற்பட்டிருந்தது. இதனால் அமெரிக்க – சீன அரசுகளை சமாளித்துப் போகக் கூடிய சூழல் ஏற்பட்டது.

மோடியைப் பொறுத்தவரை முற்று முழுதாக அமெரிக்காவுடனும் இல்லை முற்று முழுதாக சீனாவுக்கு எதிரியாகவும் இல்லை என்ற நிலைதான். ஆனால் சர்வதேச அரசியல் ஒழுங்கில் இந்தியா போன்ற வளர்ச்சி அடைந்து வரும் வல்லரசு தகுதியைப் பெறக்கூடிய நாடுகள் இரண்டு வகையான சர்வதேச நிலைப்பாட்டை தொடர்ந்து பேண முடியாது. ஏதோ ஒரு புள்ளயில் வந்து நிற்க வேண்டிய கட்டாயம் உண்டு.

டொனால்ட் ட்ரம் 2024 நவம்பரில் இரண்டாவது தடவையாகவும் அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள பின்னணியில் நிச்சயமாக உலக அரசியல் ஒழுங்கு நிலைப்பாட்டில் இந்தியாவுக்கு ஒரே வகையான சர்வதேச நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஒன்று உருவாக்கியுள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆகவே ட்ரம்பினுடைய மீள வருகை உல அரசங்கில் பல்வேறு மாற்றங்களையும் தாக்கங்களையும் செலுத்தும் என அவதானிக்கப்பட்டு வரும் நிலையில், தெற்காசிய விவகாரங்களில் இந்திய நிலைப்பாடு முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது.

அமெரிக்க – இந்திய உறவு, சீன இந்திய உறவு மற்றும் ரசிய – இந்திய உறவும் எந்த நிலைக்குச் செல்லும் என்பதைவிடவும், இந்த உறவு முறைகள் நீடிப்பதில் அல்லது சுருக்கமடைந்து மாற்றமடைவதில் இந்தியா எடுக்கவுள்ள நிலைப்பாடுதான் பிரதானமாக நோக்கப்படுகிறது.

உலகில் ஒரு முக்கிய சக்தியாக மாற வேண்டும் குறைந்தபட்சம் தெற்காசியாவில் வல்லரசாக நிலைபெற வேண்டுமானால் டொனால்ட் ட்ரமபின் மீள வருகையின் பின்னரான சூழலில் இந்தியாவுக்கு இருக்க வேண்டிய பங்களிப்புப் பற்றி மோடி அல்ல இந்திய கொள்கை வகுப்பாளர்கள் ஒருமித்த குரலில் சிந்திக்க வேண்டிய தருணமிது.

மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் எடுக்கும் தீா்மானங்கள் மற்றும் கொள்கை வகுப்புகளை விடவும் இந்தியாவின் அணுகுமுறை உலகில் ஓங்க வேண்டுமானால் மோடியைக் கடந்து புதுடில்லி கையாள வேண்டிய அணுகுமுறை முக்கியமானது.

அமெரிக்க சீன உறவுக்கு வாய்பில்லாத ஒரு நிலையில் ரசிய – சீன கூட்டுக்குள் இந்தியா நுழைவது இந்தோ – பசுபிக் பிராந்திய அரசியலுக்கு ஏற்புடையதாகாது.

அதேநேரம் 2016 முதல் 22020 வரை ட்ரம் ஜனாதிபதியாக இருந்தபோது எடுத்த தீர்மானங்களை விடவும் 2024 இரண்டாவது தடவையாக தெரிவான பின்னரான அவருடைய சர்வதேச அரசியல் அணுகுமுறை வேறொரு பரிமாணத்தை எட்டக்கூடிய நிலையும் இல்லாமலில்லை.

இஸ்ரேல் பலஸ்தீன போர் ரசிய – உக்ரெய்ன் போர் வேறொரு தளத்துக்கு மாறலாம் அல்லது கடும் நிபந்தனைகளுடன் நிறுத்தப்படலாம் அல்லது ஈரான் அரசை மையப்படுத்தி மத்திய கிழக்கில் மற்றொரு போர் ஆரம்பிக்கலாம்.

ஆனால் தெற்காசிப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு எதிராக சீனா எடுக்கும் நிலைப்பாட்டை விடவும் இந்திய நிலைப்பாடுதான் இங்கே முக்கியமானது என்பதைச் சொல்லாமல் சொல்ல முடியும். இந்திய முதுகெலும்பை நிரூபிக்கும் காலமிது.