சர்வதேச ரீதியில் சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினம் இன்று (01) அனுஷ்டிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதை நோக்காக கோண்டு 14.12.1954 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு அமைய உலக சிறுவர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்று தொடங்கி இன்று வரை உலகம் முழுவதிலும் ஒக்டோபர் 01 ஆம் திகதி சிறுவர்களுக்குரிய தினமாக கொண்டாடப்படுகிறது. எனினும் ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு தினங்களில் இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.
20.11.1989 அன்று சிறுவர் உரிமைகள் தொடர்பான பிரகடனம் நிறைவேற்றப்பட்டமைக்கு அமைவாக 18 வயதிற்குக் குறைந்த அனைத்துப் பிரஜைகளும் சிறுவர்களாகக் கருதப்படுகின்றனர். இன்றைய சிறுவர்கள் எதிர்கால உலகின் அடித்தளமாவர். அவர்களது எதிர்காலத்தை திட்டமிட்டு நெறிப்படுத்தி சமுதாயத்திற்கு பலன் தரக்கூடியவர்களாக மாற்றியமைப்பது வளர்ந்தோர் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
தெற்காசியாவில் சிசு மரண விகிதம் குறைந்த நாடு இலங்கையாக காணப்படுகின்றது. அத்துடன் இன்று உலக முதியோர் தினமும் கொண்டாடப்படுகிறது. 1990ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 14ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே இந்தத் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதியோர்களாக கருதப்படுகின்றனர். முதியோர்களும் தமது காலத்தில் குழந்தைகள் சிறுவர்கள் போல் உள்ளதாலோ என்னவோ இந்த இரு தினங்களும் ஒரே நாளில் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிறுவர்களின் எதிர்காலத்தை வளம்மிக்கதாக ஒளி பெறச் செய்வதும், முதியோர்களை பாதுகாப்பதும் சமூகத்தின் ஒவ்வொரு பிரஜைகளினதும் பொறுப்பு என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும். உலக சிறுவர் முதியோர் தினத்தைக் கொண்டாடும் இன்றைய தினத்தில் சிறுவர் உலகினைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கும், வயதான முதியோருக்குக் கிடைக்க வேண்டிய அன்பு, கண்ணியம், அவதானத்தினை வழங்கவும் தம்மால் இயன்ற திடசங்கற்ப்பத்தினை ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களும் மேற்கொள்வார்களாக இருந்தால் அதுவே இந்த சிறுவர் மற்றும் முதியோர் தினத்தின் வெற்றியாக அமையும்.