ஜப்பானின் புதிய பிரதமராக ஷிகெரு இஷிபா தேர்வு: ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி பதவியேற்பு

0
97

ஜப்பானின் புதிய பிரதமராக 67 வயதான முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஷிகெரு இஷிபா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அவர் ஜப்பானின் 102வது பிரதமராகப் பதவி ஏற்கவுள்ளார்.

ஜப்பானில் பிரமதமர் பதவிக்கு இம்முறை வரலாறு காணாத போட்டி நிலவியது. தலைமைத்துவத் தேர்வுக்கான உட்கட்சித் தேர்தலில் ஒன்பது பேர் போட்டியிட்டனர். ஜப்பானிய அரசியல் வரலாற்றில் தலைமைப் பதவிக்கு அதிகளவான போட்டியாளர்கள் போட்டியிட்டது இதுவே முதல் முறை.

ஒன்பது பேரில் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சரான ஷின்ஜிரோ கொய்சுமி, பொருளியல் பாதுகாப்பு அமைச்சர் சானே தகாய்ச்சி, முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஷிகெரு இஷிபா ஆகிய மூவரும் இறுதிப் பட்டியலுக்குத் தேர்வாகினர்.

இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற முதற்கட்ட வாக்கெடுப்பில் கடும் போட்டி நிலவிய நிலையில் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அந்த வாக்கெடுப்பில் தற்போதைய பொருளியல் பாதுகாப்பு அமைச்சரான சானே தகாய்ச்சியை இஷிபா பின்னுக்குத் தள்ளி வெற்றிபெற்றார்.

இஷிபாவுக்கு ஆதரவாக 215 வாக்குகளும் திருவாட்டி தகாய்ச்சிக்கு ஆதரவாக 194 வாக்குகளும் கிடைக்கப் பெற்றன. ஜப்பானியப் பிரதமர் பதவிக்கு ஏற்கனவே நான்கு முறை முயற்சித்த போதிலும் ஐந்தாவது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.

தமது அரசாங்கத்தின் மீது தொடர்ந்தும் மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வந்ததால், பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக கிஷிடா கடந்த மாதம் அறிவித்திருந்தார். அதனால் உடனடியாக புதியவரைத் தேர்ந்து எடுக்க வேண்டிய அவசியம் ஆளும் கட்சிக்கு ஏற்பட்டது.