பிரிட்டனைச் சேர்ந்த மைல்ஸ் ரூட்லெட்ஜ் என்ற யூடியூபர் ”நான் பிரிட்டன் பிரதமர் ஆனால் இந்தியா மீது அணுகுண்டு வீசுவேன்”, எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இந்த பேட்டியை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது, நான் பிரிட்டனின் பிரதமர் ஆக வரும்போது, பிரிட்டன் நலன்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு வெளிநாட்டு சக்திக்கும் எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவேன். சிறிய பிரச்சினை என்றாலும், வெளிநாட்டினர் மீது அணுகுண்டை பயன்படுத்த தயங்க மாட்டேன் எனக்கூறியுள்ளார்.
மற்றொரு பதிவில், பிரிட்டன் பிரதமர் ஆகும் போது நாட்டின் நலன் கருதி இந்தியா மீதும் அணுகுண்டு வீசுவேன் எனுக்கூறினார். பிறகு இதனை அவர் அழித்து விட்டார். இருப்பினும் சில நெட்டிசன்கள் இதனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.
குறிப்பாக இந்திய நெட்டிசன்கள் அவருக்கு சராமரியாக பதிலடி கொடுக்க துவங்கியதும் ரூட்லெட்ஜ், நம்புகிறீர்களோ இல்லையோ எனக்கு இந்தியாவை பிடிக்காது.
ஒருவர் இந்தியன் என்றால், அவரை உணர முடியும் என்றார். மேலும் இந்தியர்கள் தன்னை மிரட்டுவதாகவும் கூறுகிறார். அந்த நபரை ஜாதி ரீதியில் விமர்சனம் செய்ததுடன் நிறவெறியை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டு உள்ளார்.
இந்தியா குறித்த கருத்தை பதிவிட்டது முதல் இனவெறியை தூண்டும் மீம்களையும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் பதிவிட்டு வருகிறார்.
மைல்ஸ் ரூட்லெட்ஜ் 2021ம் ஆண்டு ஆப்கன் சென்றார். தலிபான்கள் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மக்கள் எப்படி வாழ்கின்றனர் என்பதை சமூக வலைதளங்களில் பதிவு செய்வதற்காக பிரிட்டன் அரசின் எச்சரிக்கையையும் மீறி சென்றார்.
ஆனால் அவர் சென்ற ஓரிரு நாட்களில் ஆப்கன் தலிபான்களின் பிடியில் வந்தது. இதனையடுத்து அவர் பாதுகாப்பான இடத்தில் அடைக்கலம் புகுந்தார்.
பிரிட்டன் இராணுவம் வந்து தான் இவரை மீட்டு வந்தது. அது முதல் இவர் பலரின் கவனத்திற்கு உள்ளானார். கஜகஸ்தான், உகாண்டா, கென்யா, தெற்கு சூடான், உக்ரைன் மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் ஆபத்தான இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு சிறைவாசம் மற்றும் சட்டவிரோதமாக எல்லையை கடந்து செல்லுதல் போன்ற சவால்களுக்கும் உள்ளானார். இதனால் இவர் ‘ஆபத்தான சுற்றுலா பயணி’ என முத்திரை குத்தப்பட்டு உள்ளார்.