கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி வைத்தியசாலையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 09ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சம்பவம் தொடர்பில் வெவ்வேறு கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அத்துடன் உயிரிழந்த மருத்துவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாளுக்குநாள் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
கொலை செய்யப்பட்ட கொல்கத்தா பெண் மருத்துவரின் கையடக்கத் தொலைபேசியை ஆய்வு செய்தால் முக்கியமான ஆதாரம் கிடைக்கும் என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். குற்றவாளியை கண்டறிவதற்கான எல்லா ஆதாரங்களும் மறைக்கப்பட்டுள்ளன.
உண்மையான குற்றவாளி வெளியில் சுதந்திரமாக சுற்றித் திரிவதாகவும் மகளின் தொலைபேசியை ஆராய்ந்தால் அனைத்தும் வெளிச்சத்துக்கு வரும் எனவும் அவரது பெற்றோர் திட்டவட்டமாக கூறுகின்றனர்.
கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் மூன்று மூத்த அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டது.
அதன்படி ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ், தற்போது கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி மருத்துமனையின் முதல்வர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆர்.ஜி.கர் மருத்துவமனைக்கு புதிய முதல்வராக குமார் பந்தோபாத்யாய நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு தொடர்பில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராகயிருந்த சந்தீப் கோஷ் மற்றும் மேலும் நான்கு மருத்துவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த இந்திய மத்திய புலனாய்வு பிரிவினருக்கு நேற்று வியாழக்கிழமை நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அதன்படி, ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் முன்னாள் தலைவர் சந்தீப் கோஷ் 8ஆவது நாளாக இந்திய மத்திய புலனாய்வு பிரிவினர் முன்னிலையில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.
மேலும் நான்கு இளநிலை மருத்துவர்களுடன் சேர்த்து அவர்கள் அளித்த வாக்குமூலங்கள் உண்மையானதா என்பதைக் கண்டறியவே இந்தச் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.