ஜனாதிபதித் தேர்தல் தோற்கடிக்கப்படுமா?

0
101

ஜனாதிபதித் தேர்தல் தோற்கடிக்கப்படுமா? வேட்பாளர்கள் தானே தோற்பார்கள்? ஜனாதிபதித் தேர்தல் எப்படி தோற்கும் என்று கேட்பது புரிகிறது… சற்று பேசலாம்.

எதிர்வரும் செப்டெம்பர் 21ம் திகதி இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கள அவதானிப்புகள் மற்றும் அனுமானங்களின் அடிப்படையில் இந்த பத்தி எழுதப்படுகிறது. இந்த பதிவு எந்த அரசியல்வாதியையும்/ கட்சிகளையும் ஆதரித்தோ/ எதிர்த்தோ எழுதப்படவில்லை. மாறாக ஒரு கழுகுப் பார்வையோடு எழுதப்படுகிறது.

இந்த முறை ஜனாதிபதித் தேர்தல் இதுவரை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் இருந்து இரண்டு விடையங்களில் தனித்துவம் பெறுகிறது.

1. இந்த முறை ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் யாருமே வெற்றிக்கு தேவையான 50 % வாக்குகளை பெறமுடியாத அளவுக்கு ஏராளமான முக்கிய பிரமுகர்கள் ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்கி உள்ளனர்.

2. தமிழ்த் தேசிய தரப்பில் பல கட்சிகளும் பொது அமைப்புகளும் இணைந்து ஒரு பொது வேட்பாளரை களமிறக்கி உள்ளனர். இந்த இரண்டு விசித்திரங்களின் முக்கியத்துவத்தை அலச முதல் சற்று வரலாற்றையும் மீளாய்வு செய்யவேண்டி உள்ளது. முடியாட்சி/ பிரபுத்துவம் போன்ற கோட்பாடுகளை எதிர்த்து மக்களாட்சி என்ற புரட்சியின் அடிப்படையில் தான் குடியரசுகள் தோன்றின.

அந்த குடியரசுகளின் நடைமுறைகளில் நாளடைவில் நிறைவேற்று அதிகாரம் நிரம்பின ஜனாதிபதி முறைமையும் இணைந்து கொண்டது. இலங்கையை பொறுத்தவரை 1948 இல் இங்கிலாந்திடம் சுதந்திரம்(?) பெற்று 1972 இல் குடியரசு என்று பெயர் சூட்டப்பட்டு 1978 இல் நிறைவேற்று அதிகாரம் முறைமையில் இன்று வரை சிக்குண்டு உள்ளோம்.

ஆனால் நன்றாக அவதானித்துப் பார்த்தால் ஐக்கிய தேசியக் கட்சியை தோற்றுவித்த சேனாநாயக்க குடும்பம், தனி சிங்கள கோசத்தோடு கட்சியை இரண்டாக்கி சுதந்திரக் கட்சியை தோற்றுவித்த பண்டாரநாயக்க குடும்பம், பின்னர் அதிலிருந்து பிரிந்தது போல வேடமிட்டுள்ள சிங்கள பௌத்தம் என்பதை இன்னும் வலுவாக்கி பெரமுனவை தோற்றுவித்த மகிந்த குடும்பம் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியை மேலும் உடைத்து முன்னணியை தோற்றுவித்த பிரேமதாச குடும்பம் என இந்த நான்கு குடும்பங்களுக்குள்ளேயே அல்லது அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்குள்ளேயே தான் இலங்கையின் ஆட்சி அதிகாரம் சங்கீதக் கதிரைகளாக மாறி மாறி இருந்திருக்கிறது.

இதற்கு குடியரசு என்று பெயரிட்டிருக்கிறோமே தவிர முடியாட்சியை ஒத்த ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. இது இலங்கை மட்டுமல்ல இலங்கை போன்ற பல நாடுகளுக்கும் பொருந்தும். அதிலும் சர்வ அதிகாரங்களையும் கொண்ட (அதை மென்வலுவில் நிறைவேற்று அதிகாரம் என்கிறார்கள்) ஜனாதிபதி முறை என்பது இலங்கையை பொறுத்தவரை சர்வாதிகாரம் படைத்த மன்னருக்கு நிகரானதாகவே உணரப்படுகிறது.

அதனால் தான் என்னவோ ஆட்சிக்கு வரும்வரை நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பேன் என கூவி ஆட்சிக்கு வரும் எந்த ஜனாதிபதியும் இதுவரை அதை மாற்ற முன்வரவில்லை. அப்படியே எதிர்காலத்தில் அது மாறினாலும் பிரதமருக்கு நிறைவேற்று அதிகாரத்துக்கு நிகரான அதிகாரங்கள் கொடுக்க முயலப்படலாம்.

ஏனெனில் இலங்கையில் சிறுபான்மை இனங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ஒரு ஒற்றுமை இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஆட்சியை ஆட்டிவைக்கும் வல்லமை பெற்றிருப்பர் என பௌத்த பீடங்கள் நன்கு அறிந்திருப்பதாலேயே இதுவரை எப்போதும் பெரும்பான்மை இனத்தவரை கொண்டிருக்க கூடிய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை யாரும் மாற்ற முன்வர வில்லை.

சிறுபான்மை இனங்களை சின்னாபின்னமாக உடைத்து தேசியக் கோட்பாடுகள் சுக்குநூறாக்கப்பட்டு யாரையும் விலைகொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்ற பூரண நம்பிக்கை வரும் போதே இலங்கையின் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நிழல் தலைமைத்துவம் அந்த மாற்றத்தை அனுமதிக்கும். அதுவரை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை வைத்துக் கொண்டே சின்னாபின்னமாக்கல் தொடரும்..நிற்க.

இந்த முறை ஜனாதிபதித் தேர்தல் அந்த தந்திரோபாயத்தை ஆட்டம் காண வைக்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது. அதாவது எனது அனுமானத்தின் படி முதலாவது சுற்றில் எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளரும் 40% வாக்குகளை தாண்டுவார்கள் என நம்பவில்லை. இருவர் 30% வாக்குகளை தாண்டுவர். மூன்றாவதாக வருபவர் 20% வாக்குகளை தாண்டுவார்.

ஏனைய வாக்குகள் ஏனைய வேட்பாளர்களிடையே சிதறும். இந்த நிலையில் முதல் இரண்டு இடங்களை பெற்றவர்கள் மட்டும் கணக்கில் எடுக்கப்பட்டு ஏனையவர்களின் (அதாவது முதல் இரண்டு இடங்களை தவிர்த்து ஏனையவர்களின்) இரண்டாம் விருப்பு வாக்குகள் எண்ணப்படும். அப்போதும் முதல் இரு இடங்களில் இருப்பவர்ளில் ஒருவர் 50% வாக்குகளை தாண்டாதவிடத்து மூன்றாவது விருப்பு வாக்கும் எண்ணப்படும்.

இந்த நிலையில் தான் முதல் இரு இடங்களில் இருப்பவர்களில் ஒருவர் ஜனாதிபதி ஆவார். அதாவது பெரும்பான்மை மக்கள் ( 50% க்கு மேற்பட்ட) முதல் தெரிவாக விரும்பாத ஒருவர் இந்த முறை ஜனாதிபதியாக வரப்போகிறார் என்பது பௌத்த சிங்கள பேரினவாதிகளுக்கு புதிய குடைச்சலை கொடுக்கும்.

இன்னும் சற்று கவனித்தீர்களே ஆனால் இந்த தேர்தலில் மூன்றாம் நான்கும் இடம் பெறப்போகும் ஜனாதிபதி வேட்பாளர்கள் இரண்டாவது மூன்றாவது தெரிவுகளை தமது ஆதரவாளர்களுக்கு சொல்லவேண்டிய நிலை என்பது கூட இந்த ஜனாதிபதித் தேர்தலின் தோல்வியையும் அதன் இன்றைய கையறு நிலையையும் பறை சாற்றுகின்றது.

முதல் சுற்றில் 30%+ வாக்குகளுடன் முன்னணி பெறப்போகும் முதல் இரு வேட்பாளர்களுக்கும் 50% ஐ தாண்ட இன்னும் 15+- 2 % வாக்குகள் தேவையாக இருக்கும். இது கிட்டத்தட்ட 20 லட்சம் வாக்குகள். இது சிறிய தொகை கிடையாது. முதலில் வாக்காளர்கள் இரண்டாம் மூன்றாம் தெரிவுகளை இடவேண்டும். பொதுவாக அது நடப்பதில்லை.

இரண்டு வேட்பாளர்களும் நெருக்கமாக இருக்கும் வாய்ப்பிருக்கும் நிலையில் இருவரும் சேர்த்து தேவையான கிட்டத்தட்ட 40 லட்சம் இரண்டாம் மூன்றாம் வாக்குகளை பிரிப்பதென்பது சிக்கலான சவால். அதாவது முதல் இரு வேட்பாளர்களுக்கு முதல் சுற்றிறல் கிடைக்கபோகும் மொத்தம் 80-90 லட்சம் வாக்குகளுக்கு மேலதிகமாக இன்னுமொரு 30-40லட்சம் வாக்களார்கள் 2ம் 3ம் தெரிவுகளை இடவேண்டும் என்பது மிகப் பெரிய சவால்.

ஆக இரண்டாம் மூன்றாம் கட்ட வாக்குகளும் எண்ணப்பட்டும் யாரும் பெரும்பான்மை பெறாத நிலமை வரும் வாய்ப்பும் இந்தமுறை இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அப்படி ஒரு நிலை வருவதையே நான் மனதார விரும்புகிறேன். அவ்வாறான நிலை வந்து இந்த ஜனாதிபதித் தேர்தல் மக்களால் தோற்கடிக்கப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை கேள்விக் குறியாக்கப்பட வேண்டும்.

அதற்கு மக்கள் இரண்டாம் மூன்றாம் தெரிவுகளை இடாமல் விட்டாலே போதும். கோட்பாட்டு ரீதியில் மூன்று துருவங்ளாக உள்ள மூவரை எவ்வாறு ஒன்றாக ஆதரிப்பது? ஏற்றுக்கொண்ட கோட்பாட்டுக்கு மட்டும் அந்த ஒருவருக்கு மட்டும் வாக்களித்தால் தரமான சம்பவம் ஒன்றை இந்த தேர்தலில் பார்க்கலாம். இப்போது தமிழ்த்தேசிய தரப்புகள்/ பொது வேட்பாளர் விடையத்துக்கு வருவோம்.

முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கி உள்ள சஜித் பிரேமதாசா, ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேக போன்றவர்ஙளுக்கு நாம் ஏற்கனவே வாக்களித்து தோற்றவர்கள். மகிந்த குடும்பம் செய்த வேலைகளை நாடு அறியும். ஏனையவர்களில் எவர் எவர் இறுதி நேரத்தில் பின்வாங்கி ஆதரவை முன்னணியில் இருக்கப் போகும் மூவரில் ஒருவருக்கு அறிவிப்பர் என்பது இப்போதைக்கு தெரியாது.

அனுரகுமார திசாநாயக்க தமிழ் தேசியத்தை வடக்கு கிழக்கு என்று இரண்டாக உடைக்க பாடுபட்டவர். இதுவரை தமிழர்களுக்கான தீர்வு என்று ஒன்றை முன்மொழிய கூடத் தயாரில்லை. ஆக யாரை ஏன் ஆதரிப்பது என்பது தமிழ்த் தேசிய கட்சிகளை பொறுத்தவரை திரிசங்கு நிலைதான்.

ஆக இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில் பௌத்த சிங்கள் பேரினவாதம் பிளவுபட்டு சிதைந்து உள்ள நிலையில் தமிழ்த்தேசியம் ஒன்று திரள்வது என்பது ஒரு சாணக்கியமான நகர்வுதான். பொதுவேட்பாளர் ஜனாதிபதியாகப் போவதில்லை. ஆனால் தமிழ் தேசத்தின் அடையாளமாக ஒரு ஒருங்கிணைப்பு, தேசத்திற்கான அங்கீகாரம் என்பது இதனூடு மீண்டும் வலியுறுத்தப்படலாம்.

தவிர இந்த ஒருங்கிணைவின் உண்மையான களயதார்த்தம் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியலில் நல்ல ஒற்றுமையை கூட தோற்றுவிக்கும் வாய்ப்பு உள்ளது. தமிழ்த் தேசிய அரசியலில் முக்கிய கட்சியான தமிழரசுக் கட்சியும் என்ன முடிவு எடுப்பது என்பதில் தடுமாறுகிறது. தமிழரசின் மத்திய குழு உறுப்பிரரே பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலை என்பது தமிழரசுக்குள்ளும் பொது வேட்பாளர் ஆதரவு நிலை இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

இதுவரை அவ்வாறு ஒரு பொதுவேட்பாளர் முன்னெடுப்பு நிகழாத நிலையில் தமிழ்த் தேசியத்துக்கு பயன்படாத ஜனாதிபதித் தேர்தல் முன்னெடுப்பில் தமிழ் தேசிய முன்னணி விலகியிருந்ததும் ஒருவகையில் நியாயமே. தவிர பொதுவேட்பாளர் என்ற கருத்தியல் பலகாலமாகவே தமிழ்த்தேசிய அரசியலில் இருந்துவந்தாலும் சில பௌத்த சிங்கள பேரினவாத அரசுகளின் பின்னணியில் இயங்கும் சில அரசியல்வாதிகளின் நகர்வுகளாலேயே ஒவ்வொரு முறையும் அது பிசுபிசுத்துப் போனது.

ஏனெனில் இன்று நம்மிடம் இருக்கும் பல அரசியல்வாதிகளின் கடந்தகாலம் என்பது மக்களுக்கு நேர்மையானதாக இருந்ததில்லை. அவ்வாறான நேர்மை இருந்திருந்தால் விடுதலைப் போராட்டம் மௌனிக்கப் பட்டு பதினைந்து வருடங்கள் ஆகியும் எந்த விதமான கட்டமைப்பு ரீரியான அரசியல் முன்னகர்வுக்கு யாரும் தயாராகி இருக்கவில்லை.

தங்கள் கதிரைகளுக்காக மக்களை பிரித்தாளும் வழமையான அரசியலையே தொடர்கின்றனர். விடுதலைப் போராட்டத்திற்கு முற்பட்ட காலத்திலும் அவ்வாறான பதவி அரசியலையே எமது பல அரசியல்வாதிகள் செய்து வந்தனர். மலையகத் தமிழர்களின் இன்றைய நிலைக்கும் அதுவே காரணம்.

வடக்கு – கிழக்கு – மலையகம் இணைந்த அரசியலை எனது அறிவுக்கு எட்டியவரை தமிழ்தேசிய அரசியல்வாதிகளும் மலையக அரசியல்வாதிகளும் தவிர்த்தே வந்தனர். சிறுபான்மை இனங்கள் தொடர்ந்தும் அடக்குமுறைக்கும் இருக்கும் நிலையில் தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டை முன்னிறுத்தி ஒரு பொதுவேட்பாளரை குறியீடாக நிறுத்துவது ஒன்று தேசத் துரோக குற்றமில்லையே.

பண்டாரநாயக்கா அரசியலுக்கும் வந்ததும் தந்தை செல்வா தனிக்கட்சி தொடங்கியதும் அவ்வாறான ஒரு முன்னகர்வின் அடிப்படையில் தானே. ஆனால் எமது தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளின் குத்துக்கரணங்களை இனியும் பார்க்கநேரலாம். அவை இல்லாமல் தமிழ்த் தேசியம் சார்ந்த ஒரு பொது வேட்பாளர் நிறுத்தப்படுவது என்பது ஆரோக்கியமான அரசியலே.

அதை அரசியல் கோமாளித்தனங்களில் அல்லாட விடாமல் பார்த்துக் கொள்ளும் வல்லமை எமது சமூகத்துக்கு குறிப்பாக சிவில் சமூகத்துக்கு உள்ளதா இல்லையா என்பது இனித்தான் தெரியப்போகிறது. ஆக முடிவுரையாக இந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தோற்கடிக்கப்படுவதை தாண்டி ஜனாதிபதித்தேர்தல் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது எனது விருப்பம்.

அது பெரும்பான்மை மக்களால் பௌத்த சிங்கள பேரினவாதத்தை முன்னிறுத்திய நிறைவேற்று அதிகாரத்துக்கும் தமிழ்த் தேசிய பொது வேட்பாளர் முன்னகர்வு மூலம் தமிழ்த்தேசிய ஒருமைப்பாட்டின் மூலமும் நடைபெறுமாயின் மிகச் சிறப்பாக இருக்கும். அப்படியே தட்டுத் தடுமாறி ஒருவர் ஜனாதிபதியாக வந்தாலும் அது மயிரிளையிலேயே நிகழும்.

அதிலும் தோற்கடிக்கப்பட்டவர்களின் உதவியால் மட்டுமே அது சாத்தியமாகும். தமிழ் தேசியத் தரப்புகள் ஒருங்கிணைந்து பொது வேட்பாளரை முன்னணர்த்துவது என்பது சின்னாபின்னப்பட்டு நிற்கும் தமிழ் தேசிய அரசியலில் கணிசமான ஒருமைப்பாட்டுக்கும் உதவக்கூடும்.

அது வரப்போகும் பாராளுமன்ற தேர்தலிலிலும் ஒருமைப்பாட்டுக்கு வழிவகுக்கும். நம்மால் முடியாத விடையங்களுக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதை விட நம்மால் முடிந்த விடையங்களில் ஒன்றிணைவது என்பதை அதிக பலத்தை கொடுக்கும். ஜனநாயகம் என்பது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபதித் தேர்தலை தோற்கடிக்கும் அல்லது குறைந்தபட்சம் ஒரு ஆட்டு ஆட்டுவிக்கும் வரலாறும் இந்த நாட்டில் அரங்கேறி குடிமக்கள் உண்மையான குடியரசை புரிந்து கொள்ளும் நிலை இனியாவது வரவேண்டும் என்பது அவா.