இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் இந்திய “றோ“வின் தலையீடுகள் அதிகமாக இருக்கலாம் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பூகோள அரசியலில் இலங்கையின் அமைவிடம் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு மற்றும் அதன் கடல்சார் செயல்பாடுகளில் நெருங்கிய தொடர்புடையது.
அதன் காரணமாக இந்தியாவுக்கு சார்ப்பான அரசாங்கமொன்று எப்போதும் இலங்கையில் இருப்பதை அந்நாடு விரும்புவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார தொடர்புகளும் பண்டையகாலம் முதல் நிலவுகிறது.
கடந்த இரண்டு தசாப்தங்களாக இலங்கையில் அதிகாரித்துள்ள சீனாவின் ஆதிக்கம் தொடர்பில் இந்திய அரசாங்கம் இலங்கை ஜனாதிபதிகளை புதுடில்லிக்கு அவ்வப்போது அழைத்து தமது கவலைகளை வெளிப்படுத்திய வண்ணமே இருந்தது.
இந்த பின்புலத்தில் இம்முறை ஜனாதிபதியாக இலங்கையில் தெரிவாகுபவர் ஒரு பலவீனமான மற்றும் இந்தியாவின் திட்டங்களை ஆதரிக்கும் ஒருவராக இருக்க வேண்டுமென மோடி அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
இருநாடுகளுக்கும் இடையில் நிலத் தொடர்பை ஏற்படுத்தும் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கக் கூடிய தலைவர் ஒருவரை இந்தியா எதிர்பார்கிறது. அதன் காரணமாகவே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாக்கவை சீனா பக்கம் செல்லவிடாது இந்தியா தம்பக்கம் இழுத்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு திட்டங்களை ஆதரிக்க அனுரகுமார திஸாநாயக்க தமது புதுடில்லி விஜயத்தில் இணக்கத்தை வெளியிட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பேச்சுகளை நடத்திவருவதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இலகுவாக தமது வழிக்குள் கொண்டுவர முடியாதென்ற எண்ணப்பாட்டில் இந்தியா இருக்கிறது. இதன் காரணமாக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதான மோடியின் இலங்கை விஜயமும் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாச அல்லது அனுரகுமார திஸாநாக்க அடுத்த ஜனாதிபதியாக தெரிவாகுவதை இந்திய விரும்புவதாகவும் அதற்காக றோவின் செயல்பாடுகள் இலங்கையில் தீவிரமாக இருக்க கூடும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.