23 ஆப்ரேஷன்ஸ்…’என் கால வெட்டணும்னு சொன்னாங்க’: நடிப்பு அரக்கன் விக்ரம் உருக்கம்

0
35

விபத்தில் காலை முறித்துக் கொண்டேன். காலையே வெட்டி எடுக்க வேண்டும் என வைத்தியர்கள் கூறினார்கள் என் முயற்சியை நான் கைவிடவில்லை என்று நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.

நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்திருக்கிறார். பா. இரஞ்சித் இயக்கியிருக்கும் அந்தப் படம் ஓகஸ்ட் 15ஆம் திகதி ரிலீஸாகவிருக்கிறது.

கண்டிப்பாக இந்தப் படம் விக்ரமுக்கு ஒரு மெகா ஹிட் படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும், இந்தப் படத்தை ஓஸ்கருக்கு அனுப்பவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

படத்தின் கதாநாயகன் விக்ரம் பேசுகையில் “நான் 8வது படிக்கும் போது சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதுவரை முதல் மூன்று ரேங்குகளில் இருந்த நான் அதன் பின்னர் கடைசி மூன்று ரேங்குகள் எடுத்தேன்.

கல்லூரி வந்த பின்னர் நடிப்பின் மீது இருந்த ஆர்வம் எனக்கு மேலும் அதிகரித்தது. ஐஐடி-யில் பிளாக் காமெடி என்ற நாடகத்தில் கதாநாயகனாக நடித்தேன். அதற்காக எனக்கு சிறந்த நடிகர் விருது கொடுத்தார்கள்.

ஆனால் அன்றைய தினமே விபத்தில் காலை முறித்துக் கொண்டேன். காலையே வெட்டி எடுக்க வேண்டும் எனக் கூறினார்கள். 23 ஆப்ரேஷன்ஸ் செய்தார்கள். அதன் பின்னர் ஊன்று கோல் வைத்து நடக்க ஆரம்பித்தேன். சினிமா வாய்ப்புகள் வந்த பின்னர் படம் எதுவும் ஓடவில்லை.

இதில் 10 ஆண்டுகள் போனது. இதனால் எனது நண்பர்களும் சினிமாவை விட்டுவிடச் சொன்னார்கள். அன்றைக்கு சினிமாவை கைவிட்டிருந்தால் இன்றைக்கு நான் உங்கள் முன் பேசிக்கொண்டு இருக்க மாட்டேன். ஒரு கனவை நோக்கி நமது சிந்தனை இருந்தால் நம்மால் நிச்சயம் அதை அடைய முடியும்.

நான் சில நேரங்களில் எனக்குள்ளே கேட்டுக்கொள்வேன், ஒருவேளை சினிமா வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்தால் என்ன செய்திருப்பாய் என, ‘ இப்போதும் முயற்சி செய்திருப்பேன்’. ஏனென்றால் நான் சினிமாவை அவ்வளவு நேசிக்கின்றேன்.

நான் அவ்வளவு நேசித்த சினிமா எனக்கு கொடுத்த அன்பளிப்புதான் நீங்கள் (ரசிகர்கள்). இந்த படம் குறித்து மற்ற மாநிலங்களில் மிகவும் ஆர்வமாக கேட்கின்றனர்.

அதை ஏற்படுத்தியவர் ரஞ்சித். இந்த படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. தொடர்ந்து நாம் படங்கள் செய்யலாம். ரஞ்சித் உங்கள் பேச்சுக்கு ஒரு வலிமை இருக்கின்றது. அதனை எப்போது சரியாகவே கையாளுங்கள்” என பேசினார்.