தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கும் அனந்தி சசிதரன்: யாழ்ப்பாணத்தில் சற்றுமுன் அறிவித்தார்

0
50

ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக அறிவித்துளார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகச்சந்திப்பிலேயே அவர் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கும் விடயத்தை அவர் தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வேட்பாளராக முன்நிறுத்தப்பட கூடாதென்பதே வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் 45 சிவில் அமைப்புகளின் கூட்டணியான தமிழ் மக்கள் சபையின் தலைமையில் வடக்கு,கிழக்கு தமிழர் தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டுமென்ற கலந்துரையாடல்கள் கடந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்டன.

தமிழ் மக்கள் சபையின் தலைமையில் வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு ஆழமான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி, ஈபிஆர்எல்எப், ரொலோ, புளொட் உட்பட பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் இந்த கலந்துரையாடல்களில் கலந்துகொண்டன. தொடர்ச்சியாக இந்தக் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வரும் பின்புலத்திலேயே அனந்தி சசிதரன் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

என்றாலும், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் அரசியல் பதவிகளில் இருந்தவர்கள் எவரும் தேர்தலில் களமிறக்கப்பட கூடாதென்ற நிலைப்பாட்டின் பிரகாரமே சிவில் அமைப்புகளின் கூட்டணியான தமிழ் மக்கள் சபை கலந்துரையாடல்களை நடத்திவந்தது

பேராசிரியர் ஒருவரை களமிறக்கும் அடிப்படையிலான கலந்துரையாடல்களும் இடம்பெற்றிருந்தன. இவ்வாறு பேச்சுகள் தொடரும் சூழலில் அனந்தி சசிதரன், தாம் பொது வேட்பாளராக களமிறங்க உள்ளதாக எந்த பின்புலத்தில் அறிவித்துள்ளார் என்பது தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.