தென்னிலங்கை இனவாதிகளின் சங்கமம்: இன்று கொழும்பில் இருந்து வெளியாக போகும் அறிவிப்புகள்

0
145

தெற்கில் அண்மையில் உருவாக்கப்பட்ட சர்வஜன அதிகாரம் எனும் அரசியல் கூட்டணியின் முதலாவது மக்கள் கூட்டம் இன்று 18 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு நுகேகொடையில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, தொழில் அதிபர் திலித் ஜயவீர உள்ளிட்டவர்கள் இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர். சிங்கள தேசிய வாத அமைப்புகளும் இணைந்துள்ளன.

இந்தக் கூட்டத்தின்போது மேலும் சில தேசிய வாத அமைப்புகளும், கட்சிகளும் மேற்படி கூட்டணியுடன் இணையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சர்வஜன அதிகாரம் கூட்டணியின் நிலைப்பாடும் இதன்போது தெளிவுபடுத்தப்படவுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷவின் வியத்கமவில் இருந்த உறுப்பினர்களும் இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் மஹிந்தவின் எழுச்சிப் பயணம் நுகேகொடையில் இருந்தே ஆரம்பமானது.

“மஹிந்த சூறாவளி“ எனும் தொனிப்பொருளின் கீழ் முதலாவது மக்கள் கூட்டம் மஹிந்த தலைமையில் நுகேகொடையில் இருந்துதான் ஆரம்பமானது.

இதன் காரணமாக நுகேகொடை இராசியான இடமாக சர்வஜன அதிகார கூட்டணியால் கருதப்படுவதுடன் இங்கிருந்து தமது பிரசாரத்தையும் ஆரம்பிக்க உள்ளனர்.

தொழில் அதிபர் தலித் ஜயவீரவை ஜனாதிபதி வேட்பாளராக இவர்கள் முன்னிறுத்தக் கூடும் என தெரிய வருகிறதுடன் இவர்களை கடுமையான சிங்கள இனவாதம் பேசுபவர்களின் கூட்டணி என்றும் விமர்சிக்கப்படுகிறது.

இதேவேளை விமல், கம்மன்பில மற்றும் திலித் ஆகியோர் இன்று முக்கிய அறிவிப்புகள் சிலவற்றை வெளியிட உள்ளதாகவும் தெரியவருகிறது.