சர்வதேச நாணய நிதியத்தின் 25 சதவீத வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றத் தவறிவிட்டது: வெரிட்டி ரிசர்ச் நிறுவனம் குற்றம்

0
47

சர்வதேச நாணய நிதியத்தின் உதவித் திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட வேண்டிய நிருவாகம் தொடர்பான முக்கியமான உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் இலங்கை தொடர்ந்தும் தவறி வருவதாக வெரிட்டி ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த நிருவாகம் தொடர்பான முக்கியமான கடமைகளே நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கான அடித்தளம் எனவும் குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை இலங்கைக்கு வழங்கப்பட்ட கடனின் மூன்றாவது தவணைக்கு எதிர்வரும் 12 ஆம் திகதி அங்கீகாரம் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவித்திட்டத்தின் கீழ் கடந்த மே மாத இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய 63 உறுதி மொழிகளில் இலங்கை 32 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளதுடன், 16 வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாக வெரிட்டி ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், 15 உறுதிமொழிகளின் முன்னேற்றம் மற்றும் முன்னேற்றத்தை அளவிடுவதற்கு போதுமான தகவல்கள் இல்லாததன் காரணமாக வகைப்படுத்த முடியாதுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

நிறைவேற்றத் தவறிய 16 உறுதிமொழிகளில் 7 நிதி மேலாண்மை, 6 நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் 3 ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தனது ஆளுகை தொடர்பான விவகாரங்களை அபிவிருத்தி செய்வதில் தொடர்ச்சியாக தோல்வியடைந்து வருவதாகத் தோன்றுவதாக வெரிட்டி ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Oruvan