T20 WC 2024: சூப்பர் ஓவரில் நமீபியாவை கரை சேர்த்த டேவிட் வைசி

0
160

T20 உலகக்கிண்ணப் போட்டியில் நமீபியா – ஓமன் இடையிலான போட்டியில் நமீபியா அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று அசத்தியது.

T20 உலகக்கிண்ணம் 2024 3 ஆவது போட்டி நமீபியா – ஓமன் இடையே நடைபெற்றது. பார்படாஸ், கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமன் அணி 19.4 ஓவர்களில் 109 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கெயில் 39 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் 34 ஓட்டங்கள் எடுத்தார். மேலும், நமீபியா சார்பில் ரூபன் டிரம்பெல்மேன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியில், நமீபியா நாணயச்சுழற்சியில் வெற்றிப்பெற்று பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட வந்த ஓமன் அணியின் ஆரம்பம் மிகவும் மோசமாக அமைந்தது. முதல் 2 பந்துகளில் அந்த அணி முதல் 2 விக்கெட்களை இழந்தது. இதன்பின் ஓமன் அணியால் மீள முடியாமல் மெல்ல மெல்ல நமீபியா பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகரித்தது.

3ஆவது ஓவரின் மூன்றாவது பந்தில் நசீம் குஷி 1 பவுண்டரி உதவியுடன் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ஏழாவது ஓவரின் மூன்றாவது பந்தில் ஜீஷான் 20 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 22 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இப்படியாக ஓமன் அணி அடுத்தடுத்து விக்கெட்களை விட, அந்த அணி 12ஆவது ஓவரில் 68 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஐந்தாவது விக்கெட்களை இழந்து தடுமாறியது. தொடர்ந்து, ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் காலித் கெயில் 39 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உதவியுடன் 34 ஓட்டங்கள் எடுத்து டேவிட் வெஜேவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் அந்த அணி 20ஆவது ஓவரின் நான்காவது பந்தில் ஷகீல் அகமதின் 10ஆவது விக்கெட்டை எடுத்து நமீபியா அசத்த, ஓமன் அணி 19.4 ஓவர்களில் 109 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

நமீபியா தரப்பில் ரூபன் டிரம்பெல்மேன் அதிகபட்சமாக 4 ஓவர்களில் 21 ஓட்டங்கள் மட்டுமே விட்டுகொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுதவிர டேவிட் விஜே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

நமீபியா இன்னிங்ஸ்:

110 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நமீபியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் மைக்கெல் ஓட்டம் ஏதுவுமின்றி வெளியேற, மற்றொரு தொடக்க வீரரான டெவின் 24 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஜன் ப்ரைலிங்க் 48 பந்துகளில் 45 ஓட்டங்கள் எடுத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, இதுவே நமீபியா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. பின்னர் விளையாடிய வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு நமீபியா அணியால் வெறும் 109 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் நமீபியா – ஓமன் அணிகளும் சூப்பர் ஓவர் முறையில் யார் வெற்றியாளர்கள் என்பதை கண்டறிய களமிறங்கினர். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நமீபியா சூப்பர் ஓவரில் 6 பந்துகளில் விக்கெட் இழப்பின்றி 21 ஓட்டங்கள் குவித்தது.

சூப்பர் ஓவரில் களமிறங்கிய நமீபியாவில் அதிகபட்சமாக டேவிட் வைசி 4 பந்துகளில் 13 ஓட்டங்களும், ஜெர்ஹார்டு 2 பந்துகளில் 8 ஓட்டங்களும், எடுத்திருந்தனர்.

22 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய ஓமன், 6 பந்துகளில் 1 விக்கெட் இழப்பிற்கு வெறும் 10 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க, நமீபியா வெற்றிபெற்று அசத்தியது. ஓமன் சார்பில் அதிகபட்சமாக இலியாஸால் 2 பந்துகளில் 7 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

நமீபியா வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த டேவிட் வைசி, ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.