இலங்கையின் பயண தாமதத்தால் அதிருப்தி

0
699

டி20 உலகக் கிண்ண போட்டியில் பயணத் தாமதத்தை எதிர்கொண்டுள்ள இலங்கை அணி பயிற்சி மேற்கொள்வதிலும் இடையூறை எதிர்கொண்டுள்ளது. தென்னாபிரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளும் இதே நிலையை சந்தித்துள்ளன.

புளொரிடாவில் அயர்லாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் ஆடிய இலங்கை அணி நியூயோர்க் செல்வதற்கான விமானப் பயணத்தில் ஏழு மணி நேர தாமதம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நேரப்படி நியூயோர்க் நகரை வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணிக்கு சென்றடைய திட்டமிட்டபோதும் அடுத்த நாள் அதிகாலை ஐந்து மணிக்கே அங்கு சென்றடைய முடிந்துள்ளது.

இதனால் அன்று காலை திட்டமிடப்பட்ட துடுப்பாட்ட பயிற்சியும் ரத்து செய்யப்பட்டிருப்பதோடு உலகக் கிண்ண தயார்படுத்தலிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இலங்கை அணி தங்கி இருக்கும் ஹோட்டல் பயிற்சி மைதானத்தில் இருந்து 1.5 மணி நேர தூரத்தில் இருப்பது வீரர்களுக்கு மேலும் களைப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

இதற்கு மாறாக இந்திய அணி தனது மைதானத்திற்கு அருகில் உள்ள ஹோட்டலிலேயே தங்குவதோடு பெரும்பாலான போட்டிகளை ஒரு மைதானத்தில் ஆடுவது மேலதிக பயணங்களை தவிர்த்து அந்த அணிக்கு வசதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஏற்பாட்டு திட்டங்கள் மற்றும் மேசமான தயார்படுத்தல்கள் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸிலிடம் (ஐ.சி.சி.) இலங்கையுடன் தென்னாபிரிக்கா மற்றும் அயர்லாந்தும் முறையிட்டிருப்பதாக தெரியவருகிறது. குறிப்பாக இலங்கை அணி ஆரம்ப சுற்றில் ஆடும் நான்கு போட்டிகளும் வெவ்வேறு மைதானங்களில் இருப்பது மேலதிக சுமையாக உள்ளது. போட்டியில் அணிகள் சரிசமமாக நடத்தப்படாதது குறித்தே அதிருப்தி அதிகரித்துள்ளது.