உலகெங்கும் வருடாந்தம் 60 இலட்சம் பேரின் உயிரைப் பலிகொள்ளும் புகைத்தல் பழக்கம்!

0
502
சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் இன்று

இலங்கையில் புகைத்தல் மற்றும் மதுப்பாவனையால் தினமும் சுமார் 60 பேர் மரணிக்கின்றனர். இதனால் வருடமொன்றுக்கு மரணிப்போரின் எண்ணிக்கை சராசரியாக 20,000 ஆகும். சர்வதேச ரீதியில் வருடாந்தம் சுமார் 60 இலட்சம் பேர் புகைபிடித்தலினால் உயிரிழக்கின்றனர். மேலும் புகைப்பிடிப்பவர்களை சூழவுள்ள இரண்டாம் நிலை புகைத்தல் காரணமாக வருடமொன்றிற்கு 6 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

அமெரிக்காவில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியிலேயே புகையிலை பயிரிட ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்கர்கள் காயங்களை சுத்தமாக்கும் தொற்றுநீக்கியதாகவும் வலி நிவாரணியாகவும் புகையிலையை பயன்படுத்தினர். வடஅமெரிக்காவில் பணம் உழைக்கும் பயிராக புகையிலை இருந்துள்ளது.

1847 ஆம் ஆண்டு பிலிப் மொரிஸ் என்பவரே முதன் முதலாக புகையிலையைப் பயன்படுத்தி சிகரெட் தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பித்திருந்தார். எனினும் சிகரெட் பயன்பாடு என்பது ஆரம்ப காலங்களில் இராணுவ வீரர்களிடமும் பாதுகாப்புப் படையினரிடமே காணப்பட்டது.

1953 இல் சிகரட், புகையிலை பாவனையால் பலவகையான புற்றுநோய்கள் ஏற்படுகின்றன என ​ெடாக்டர் எமல் எல் வைன்டஸ் கண்டுபிடித்தார்.

இதனைத் தொடர்ந்து 1964 களில் அமெரிக்க அரசு புகைபிடிப்பதால் சுகாதாரத்திற்கு கேடு என்னும் நோக்கில் அவர்களுக்கு எதிராகவும் விற்பனைக்கு எதிராகவும் சட்டம் உருவாக்கியது. மனிதனுக்கு மரணத்தைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாம் நிலையிலுள்ளது. இதனாலேயே புகையிலை பாவிப்பு தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக உலக சுகாதார அமைப்பு 1987 ஆம் ஆண்டில் மே 31 ஆம் திகதியை உலக புகையிலை எதிர்ப்புத் தினமாக பிரகடனப்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து உலக நாடுகள் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 31 ஆம் திகதியை உலக புகையிலை எதிர்ப்புத் தினமாக ஒவ்வொரு கருப்பொருளை மையமாகக் கொண்டு விழிப்புணர்வு நாளாக அனுஷ்டித்து வருகின்றன.

புகைத்தல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு உலகில் நிமிடத்திற்கு 6 பேர் மரணிப்பதாக சர்வதேச சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.

20 ஆம் நூற்றாண்டில் 100 மில்லியன் பேரும், 21 ஆம் நூற்றாண்டில் இதுவரை 1 பில்லியன் பேரும் புகைத்தல் தொடர்பான நோய்களால் இறந்துள்ளனர் எனவும் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இது தொடருமானால் 2030 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 8 மில்லியன் பேர் வரை வருடாந்தம் உலகில் மரணமடையலாம் என எதிர்வு கூறப்படுகிறது. புகைக்கும் போது வெளிவரும் புகையில் 400 இற்கும் அதிகமான நச்சு இரசாயனப்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றில் 50 வீதமானவை சுவாசப் பற்றுநோயினை ஏற்படுத்துபவையாகவுள்ளன.

புகையை சுவாசிப்பதால் இதயம், நுரையீரல் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்ற அதேவேளை நீரிழிவு, இரத்த அழுத்தம், உடல் உறுப்புகளில் பாதிப்பு, பல் மற்றும் உதடுகளின் நிறம் மாறுதல், இருமல் என பல நோய்கள் புகைப்பவர்களின் உடலினை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இதனால் புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது வாழ்நாளினை வைத்தியசாலைகளிலும் மருந்துகளுடனும் கழிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.

புகையிலையை பல விதங்களில் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக வெற்றிலையுடன் சேர்த்து உண்ணல், மூக்குப் பொடியாக பயன்படுத்தல், குழாய்களைப் பாவித்து புகையை உறிஞ்சுதல், இதனை விட பீடி, சுருட்டு, சிகரெட் என பல முறைகளில் புகையிலையை பயன்படுத்துகின்றனர்.

புகைப்பிடிப்பதால் இறுதியில் கிடைக்கும் பிரதிகூலங்களும் வேதனைகளும் செல்லிலடங்காதவை.

புகையினைஉள் இழுக்கும் போது புகையிலுள்ள நிக்கோர்டின் என்னும் இரசாயனப் பொருள் மூளையினைச் சென்றடைகின்றது. ஒவ்வொரு முறையும் இழுக்கும் போதும் அந்த இரசாயனப் பொருள் மூளைக்கு செல்கின்றது. அத்துடன் இந்த இரசாயன நச்சுப் பொருளுடன் 700 வகையான வேறு இரசாயனக் கூட்டுப் பொருட்களும் செல்கின்றன.

மூளையின் மனநிலை மாற்றுக் கலங்களுக்கு நிக்கோர்டின் உட்பட இரசாயனக் கூட்டுப்பொருட்கள் செல்வதால் புகைபிடிப்பவர்களுக்கு ஒரு வகை மாயையைத் தோற்றுவிக்கின்றன. மனஅழுத்தங்களுக்கு உள்ளாகியிருப்பவர்கள் இந்த மாயையை ஒரு சிறந்த தீர்வாக எண்ணுகின்றனர். எனவே புகைபிடித்தலை ஒரு பழக்கமாக ஏற்றுக்கொள்ள முனைகின்றனர்.

எந்தவொரு பிரச்சினைகளையும் பேசியோ, ஆராய்ந்தோ, சிந்தித்தோ முடிவெடுக்காது புகைபிடித்தலை நாடுவது ம​ைடமையாகும்

இலங்கையிலேயே புகைபிடிப்பதற்காக பல காரணங்களை சொல்கின்றனர். மகிழ்ச்சிக்கா22 வீதமானோரும் நண்பர்களுடனும் பொழுது போக்கவென 8.2 வீதமானோரும் புகைப்பழகத்திலிருந்து விடுபட முடியாத காரணத்தினால் 17 வீதமானோரும், தனிமையைப் போக்க 10.5 வீதமானோரும் பரீட்சித்துப் பார்க்கவென 8.7 வீதமானோரும், நண்பர்களின் அழுத்தங்களுக்காக 10 வீதமானோரும், பிரச்சினைகளுக்காக 15 வீதமானோரும் தாம் புகைபிடிப்பதை காரணமாகச் சொல்கின்றனர்.

200 குடும்பங்கள் சிகரெட் வாங்க மாதாந்தம் செலவு செய்யும் தொகை 5 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவாகும். ஒருநாளைக்கி 4101 மில்லியன் சிகரெட்டுகள் விற்கப்படுகின்றன.

இலங்கை மட்டுமல்லாது உலக நாடுகள் பல சிகரெட் விற்பனை மூலமே அதிகளவு வருமான வரியினை ஈட்டுகின்றன.

அதேவேளை புகை தொடர்பான நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க சுகாதார அமைச்சு 22 வீதம் செலவிடுகின்றது. புகைபிடிப்பவர்களில் 60 பேர் உயிரிழக்கின்ற அதேவேளை 60 பேர் புதிதாக புகைபிடிக்கப் பழகுகின்றனர்.

பொது இடங்களில் புகைபிடித்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றினை பலரும் கருத்தில் கொள்வதில்லை. நாம் பொருட்களை வாங்கும் போது உற்பத்தித் திகதி, முடிவுத் திகதி என ஒவ்வொன்றையும் பார்த்தே வாங்குகின்றோம். ஆனால், சிகரெட் பெட்டிகளிலோ, மதுசாரப் போத்தல்களிலோ பெரிய எழுத்துகளினால் எழுதப்பட்டிருக்கும் உடலுக்கு தீங்கானவை என்னும் வாசகத்தை மட்டும் பலர் வாசிக்கவோ பின்பற்றவோ தவறிவிடுகின்றனர்.