பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த நாடுகள்!

0
85

பலஸ்தீனத்தை தனி நாடாக ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் கூட்டாக அங்கீகரித்துள்ளன. இந்நிலையில் பலஸ்தீனத்தை தனி அரசாக அங்கீகரிப்பதில் தமக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை என பிரான்ஸும் அறிவித்துள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன்

அதன்படி தகுந்த நேரத்தில் பலஸ்தீனத்தை தனி அரசாக அங்கீகரிக்க தான் தயாராக இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் சான்சிலர் ஒலாப் சோல்ஸ் சகிதம் செய்தியாளர் மாநாட்டில் காசா குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

பலஸ்தீனத்துக்கான அங்கீகாரம் சரியான தருணத்தில் கொடுக்கப்பட வேண்டும் என தான் கருதுவதாகவும் உணர்ச்சிவசப்பட்டு இந்த முடிவை எடுப்பதை தான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்றும் பிராஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எனவும், இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே இதன் இலக்கு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனி நாடாக செயல்படுவதற்கான உரிமை, பாலஸ்தீனத்துக்கு உள்ளதாக நோர்வே பிரதமர் ஜோனாஸ் காரும் தெரிவித்துள்ளார்.

அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ்

அதேவேளை அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ் கூறுகையில்,

அயர்லாந்தின் இந்த முடிவு நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருப்பது பற்றியது எனவும், காசாவில் நாம் காணும் மனிதாபிமான பேரழிவை நிறுத்துமாறு மீண்டும் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு 2023 அக்டோபர் 7 ஆம் திகதி  இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதனைதொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை காசா நகர் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.

இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் இன்று வரை காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 36,000 க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன்  81,026 பேர் காயமடைந்துள்ளமையும் குறிபிடத்தக்கது.