15ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படுமா?: வெளியான செய்தியால் பரபரப்பு

0
47

எதிர்வரும் 15ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் சில தென்னிலங்கை சிங்கள ஊடகங்கள் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திகளால் இலங்கை அரசியல் களத்தில் பரபரப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆனால், ஜூன் இரண்டாம் வாரம் வரை தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்படாது என அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புதிய மின்சாரச் சட்டத்தை ஜூன் முதல் வாரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்பதால் அதற்கு முன் எக்காரணம் கொண்டும் நாடாளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதன் பின்னரே எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும். என்றாலும், முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தல் நடத்துவது குறித்து அரசாங்கம் இதுவரை எவ்வித கலந்துரையாடல்களையும் நடத்தவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்பது ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுனவின் கோரிக்கையாக உள்ளது.

ஆனால், அதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதுவரை பச்சைக்கொடி காட்டவில்லை. இந்த பின்புலத்தில் இன்று ரணில் விக்ரமசிங்க மற்றும் பசில் ராஜபக்சவுக்கு இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.