ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வெவ்வேறு சிறைகளில் தண்டனை அனுபவித்து வந்த 44 இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரமழான் மாதத்தை முன்னிட்டு அரச உத்தரவுக்கமைய இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் வெளிவிவகார அமைச்சு அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி பொது மன்னிப்பு பெற்ற இந்த 44 இலங்கையர்களும் உரிய காலத்திற்குள் ஐக்கிய அரபு இராச்சிய அரசால் மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.
அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகம், ஐக்கிய அரபு அமீரகம், அரசாங்க அதிகாரிகள் மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து அவர்களை பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமென தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், குறித்த இலங்கையர்களுக்கு மன்னிப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டமைக்காக ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்கம், அதன் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சுகளுக்கு அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதுவர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.