அரச சொத்தை தவறாக பயன்படுத்திய ரணில்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

0
29

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய ஜே.வி.பியின் கீழ் இயங்கும் சோசலிச இளைஞர் சங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இளைஞர் சேவை மன்றத்தின் சொத்துக்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பிலேயே இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த முறைப்பாடு இன்று எழுத்து மூலம் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படும் எனவும் சோசலிச இளைஞர் சங்கம் தெரிவித்துள்ளது.

என்றாலும் ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக அவர் பதவி வகிக்கும் காலத்தில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என்பதுடன் வேறு விதமான சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது.

அவருக்கு எதிராக இலஞ்ச – ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் அளிக்கப்பட்டாலும் அதுதொடர்பிலான விசாரணைகளில் ஜனாதிபதியின் பிரதிநிதிகள் அல்லது அவர் நியமிக்கும் பிரதிநிதி ஒருவரே கலந்து கொள்வார்.

அரசியலமைப்பின் பிரகாரம் ஆளும் அல்லது எதிர்க்கட்சிகளால் குற்றப் பிரேரணையொன்றை கொண்டுவருவதன் ஊடாக மாத்திரமே ஜனாதிபதி ஒருவரை பதவி நீக்கம் செய்ய முடியும்.

இல்லாவிட்டால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை போன்று தானாக முன்வந்து ஜனாதிபதி ஒருவர் இராஜினாமா செய்தால் மாத்திரமே அவரது பதவி பறிபோகும்.

இலங்கையில் அரசியல் வரலாற்றில் ஜனாதிபதிகள் பதவி வகித்த காலத்திலும் அவர்கள் பதவில் இருந்து விலகி பின்னரும் அவர்கள் மீது சுமத்தப்படும் ஊழல் – மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதியான விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.