ரணில் இலங்கையின் மோடி: மீண்டும் ஜனாதிபதியானால் நாடு முன்னேறும் – டயானா கமகே

0
33

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நடத்திய பிரதான குற்றவாளி யாரென எதிர்க்கட்சினருக்குத் தெரிந்தால் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய டயானா கமகே மேலும் கூறியதாவது,

”உரிய விசாரணைகள் ஊடாக அவர்களுக்கு தண்டனை வழங்கி இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வை வழங்கி முடிவுக்கு கொண்டுவர வேண்டும். தங்களிடம் உள்ள ஆதாரங்களை பொலிஸார், நீதிமன்றம், புலனாய்வுத்துறையினரிடம் கையளித்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருமாறு எதிர்க்கட்சியிடம் கோருகிறேன்.

தேர்தல் நெருங்கிவரும் சூழலில் கத்தோலிக்க மக்களை பகடைக்காயாக பயன்படுத்த வேண்டாம். தற்போது இந்த விடயம் தொடர்பில் வெளிப்படுத்தப்படும் தகவல்களும் கருத்துகளும் தேர்தலை இலக்காக கொண்டதாகும்.

நாட்டு மக்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம். இவர்கள் சாதாரண அகிம்சையான மக்கள். அவர்களது எண்ணங்களுடனும் உணர்வுகளுடனும் விளையாட வேண்டாம். அரசியல் நிகழ்ச்சி நிரலில் சிக்க வேண்டாமென பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் கேட்டுக்கொள்கிறேன்.

கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களிக்குமாறு கடந்த காலத்தில் பேராயர் கோரியிருந்தார். தற்போது வேறு நபர்களுக்கு வாக்களிக்குமாறு கூறுகிறார். உங்கள் மக்களை அரசியலுக்காக பயன்படுத்த வேண்டாம்.

தேவாலயங்களையும் கத்தோலிக்க மக்களையும் பார்த்துக்கொள்ளுமாறு அவரிடம் கோருகிறோம். அரசியல்வாதிகள் அவர்கள் பணியை செய்வார்கள் என்பதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது பணியை செய்வார்.

ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்றது முதல் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவர் இதற்கு முன்னர் இலங்கையின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருந்தால் நாடு இந்த நிலைமையில் இருக்காது. முன்னேறிய நாடாக மாறியிருக்கும். அதனை அவரது குறுகிய கால செயல்பாடுகளில் நிரூபித்திருக்கிறார்.

இந்தியாவில் தேர்தல் இடம்பெற்று வருகிறது. இம்முறையும் அங்கு மோடிதான் பிரதமராகுவார். அவர் நாட்டையும் மக்களையும் நேசிக்கும் தலைவராக இருப்பதால்தான் வெற்றி பெறுகிறார். இலங்கையின் மோடிதான் ரணில் விக்ரமசிங்க. அவர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட வேண்டும்.” என்றார்.