வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு: ஒரே வாரத்தில் மீண்டெழுந்த துபாய்

0
50

ஐக்கிய அரபு அமீரகத்தில் 75 ஆண்டுகள் இல்லாதளவு கடுமையான மழை பெய்ததன் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. டுபாய் விமான நிலையமானது கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் துபாய் விமான நிலையம் தற்பொழுது முழு திறனுடன் அதன் வழக்கமான அட்டவணயை பின்பற்றி இயங்கி வருகின்றது.

“டுபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) அதன் வழக்கமான விமான அட்டவணையை இயக்குகிறது. அதன்படி ஒரு நாளைக்கு சுமார் 1, 400 விமான சேவைகளை வழங்குகிறது” என்று டுபாய் விமான நிலையங்களின் தலைமை நிர்வாக அதிகாரி பால் கிரிஃபித்ஸ் கூறுகிறார்.

நெருக்கமாக பணியாற்ற வேண்டியிருந்தது

மேலும் “விமான நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளில் தண்ணீர் தேக்கம் முற்றிலும் இல்லை. எங்கள் மனிதவளம், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் இடங்கள் மீண்டும் வழக்கம் போல் செயல்படுகின்றன” என்றும் கிரிஃபித்ஸ் தெரிவித்தார்.

டுபாயில் கடந்த வாரம் பெய்த கனமழை மற்றும் அதன் பின்விளைவுகள் காரணமாக மொத்தம் 2,155 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 115 விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

கனமழையால் டுபாய் விமான நிலையம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் விமான நிலையத்தின் வழக்கமான செயல்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இத்தகைய பாதிப்பை அனுபவித்ததற்குப் பிறகு விமான நிலையத்தை மீண்டும் வழக்கமாக இயக்குவது சாதாரண விஷயம் அல்ல என்று கூறிய கிரிஃபித்ஸ் “விமான அட்டவணைகளை திருத்தம் செய்வதற்கும் மனிதவளத்தை அதிகரிப்பதற்கும் மற்றும் விமான சேவை பாதிப்பால் இடையூறுகளை சந்தித்த அனைவரையும் கவனிப்பதற்கும் நாங்கள் எங்கள் விமான கூட்டாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டியிருந்தது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வேதிப் பொருள்கள் மேகங்களில் தூவப்படுகிறது

பாலைவன நகரமான துபாயில் கடந்த 16ஆம் திகதி இரண்டு ஆண்டுகளில் பெய்யும் மழையின் அளவுக்கு 24 மணிநேரத்தில் கொட்டித் தீர்த்தது. இதனால் சர்வதேச விமான நிலையம் உட்பட முக்கிய நெடுஞ்சாலைகள் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

குடியிருப்பு பகுதிகள் மற்றும் வீடுகள் பலவும் வெள்ளத்தில் மூழ்கின. வாகனங்கள் பல மழை வெள்ளத்தில் அடித்துச் சென்றன. சமூக ஊடகங்களில் டுபாயின் வெள்ள வீடியோ காட்சிகள் இடம்பிடித்தன.

சிலர் காலநிலை மாற்றத்தின் காரணமாக இப்படி நிகழ்ந்திருக் கலாம் என்று கூறி வருகின்றனர். ஆனால் புதுவிதமாகச் செயற்கை மழையை உருவாக்கும் `கிளவுட் சீடிங்’ (Cloud Seeding) எனப்படும் மேக விதைப்பு தொழில்நுட்பமே காரணம் எனப் பரவலான கருத்து நிலவி வருகிறது.

இயற்கையாக மழை பொழியாத சமயங்களில் செயற்கை மழையை உருவாக்க கிளவுட் சீடிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. செயற்கையாக மழையை உருவாக்க ஹெலிகாப்டர்கள் மூலமாக சில வேதிப் பொருள்கள் மேகங்களில் தூவப்படுகிறது.

இந்த நிலையில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட டுபாய் ஒரு வாரத்தில் மீண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.