காசா மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் கல்முனை கல்வி வலயம்: 31 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான தொகை கையளிப்பு

0
29

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை காரணமாக காசா மிகப்பாரிய அளவில் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இதன்படி, காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 34,049 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 76,901 பலஸ்தீனியர்கள் படுகாயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பத்து நிமிடத்திற்கு ஒரு பலஸ்தீன குழந்தை பாதிக்கப்படுவதை ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலையில் கல்முனை வலயக் கல்வி அலுவலகம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.

இதற்கமைய 31 இலட்சத்து 28 ஆயிரத்து ஐநூறு ரூபா இன்று (22) கையளிக்கப்பட்டுள்ளது. வலயக் கல்விப் பணிப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீமிடம் கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ் குறித்த காசோலையினை கையளித்துள்ளார்.

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர் உட்பட கல்வி வலய உயரதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

வலயக் கல்விப் பணிப்பாளரது வழிகாட்டலுக்கமைய கணக்காளரின் நெறிப்படுத்தலில் வலயக் கல்வி அலுவலக கல்விசார் மற்றும் கல்விசார ஊழியர்கள், அதிபர்களின் நிதிப்பங்களிப்புடன் இத்தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஜானாதிபதியின் ஆலோசனைக்கமைய வருடாந்தம் இடம்பெறும் இப்தார் நிகழ்வுக்கான செலவீனத்தை மட்டுப்படுத்தியே இந்த நிதி திரட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.