ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குழுக் கூட்டத்தில் மைத்திரிபால பங்குபற்றினாரா?

0
32

சந்திரிகாவின் ஏற்பாட்டில் சென்ற 8 ஆம் திகதி இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் செல்லுபடியற்றது எனக் குற்றம் சுமத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஸ்மிந்த இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த பின்னணியில் இன்று 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் பதில் தலைவராக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் விஜேதாச ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.

இக் கூட்டத்தில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களும் கலந்துகொண்டதாக துமிந்த கூறுகிறார். இதன்போதே விஜேதாச ராஜபக்ச பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால பங்குபற்றினாரா?

இதேவேளை கட்சித் தலைவர் பதவியை வகிக்க முடியாதெனக் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்ட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட்டம் நடைபெற்றபோது அருகில் உள்ள அறை ஒன்றில் அவதானித்துக் கொண்டிருந்தாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

சந்திரிக்காவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள முரண்பாட்டினால் கட்சி பிளவுபட்டுள்ளதாக கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பதில் பொதுச் செயலாளர் துமிந்த மித்திரபால மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் சிலர் கூட்டாக இணைந்து சந்திரிகாவின் செயற்பாட்டுக்கு எதிராகச் செயற்பட்டு வருகின்றனர். இந்த முரண்பாடுகளுக்கு மத்தியில் தற்போது இரண்டு பதில் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விஜயதாச ராஜபக்ச பதில் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டமைக்கு எதிராக சந்திரிகா தரப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளது.

கட்சி யாப்பு சொல்வதென்ன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பு விதிகளின் படி பொதுச் செயலாளருக்கு அதிகளவு அதிகாரங்கள் இருப்பதால் பதில் பொதுச் செயலாளரும் அதே அளவு அதிகாரங்களைக் கொண்டிருப்பதாக கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பொதுச் செயலாளராகப் பதவி வகித்திருந்த தயாசிறி ஜயசேகரவும் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள நிலையிலேயே பதில் பொதுச் செயலாளராக துமிந்த மித்திரிபால நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் பதில் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவானர். இதனால் ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சியியை மீளவும் தன் கட்டுப்பாட்டில் எடுக்க முற்படும் சந்திரிகாவின் நகர்வுக்கு இது பெரும் பின்னடைவு என்று கூறப்படுகின்றது.

தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கப்போகும் முடிவின் அடிப்படையிலேயே யார் பதில் தலைவர் என்பதும் தெரியவரும். சிலவேளைகளில் இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கும் செல்லும் நிலை ஏற்படலாம்.

கட்சி அலுவலகத்திற்கு முன்பாக பதற்றம் கொழும்பு மருதானை டார்லி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தின் பின்னர் கட்சி ஆதரவாளர் குழுவொன்று தலைமையகத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளது. இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வீதியும் தற்காலிகமாக மூடப்பட்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.