மேல் மாகாணத்தில் புதிய பாதுகாப்பு திட்டம்!

0
37

மேல் மாகாணத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பதற்காக மே மாதம் முதலாம் திகதி முதல் புதிய பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டத்திற்காக விசேட பொலிஸ் குழுக்களுக்கு ஏற்கனவே பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த 3 வருடங்களில் மேல் மாகாணத்தில் 25 பொலிஸ் அதிகார எல்லைகளில் குற்றச்செயல்கள் துரித கதியில் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவற்றில் கடந்த ஆண்டில் 846 தங்க நகை கொள்ளைகள், 12,125 வீடுகள் உடைப்பு மற்றும் 1,748 வாகனத் திருட்டுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இது நாடு முழுவதும் நடந்த குற்றங்களில் 32% ஆகும்.

அதன்படி 60 வீதமான பொலிஸ் உத்தியோகத்தர்களை பொலிஸ் நிலையங்களில் கடமையில் ஈடுபடுத்துமாறு நாடளாவிய ரீதியில் பொலிஸ் பிரிவுகளின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் மற்றும் T56 ரக துப்பாக்கிகள் வழங்கி அந்தந்த பகுதிகள் கண்காணிக்கப்படவுள்ளன.

அத்துடன், பாதாள உலகக் குழுக்களை ஒடுக்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள 20 பொலிஸ் குழுக்களுக்கு மேலதிகமாக, பொலிஸ் மா அதிபர் எதிர்காலத்தில் 10 பொலிஸ் குழுக்களையும் கடமையில் ஈடுபடுத்தவுள்ளார்.

அந்த 10 குழுக்களுக்கு சுமார் 360 குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டு அவர்களைக் கைது செய்ய அறிவுறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் 100 பேர் கொண்ட மற்றுமொரு பொலிஸ் குழுவும் விசேட பயிற்சிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்காக விசேட சீருடை, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் துப்பாக்கிகளும் வழங்கப்படவுள்ளன.

குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்வதே அவர்களின் இலக்காகும்.

கொழும்பில் பொலிஸாரால் கண்காணிக்கப்படும் 176 சிசிடிவி கெமராக்களின் எண்ணிக்கையை 2000 ஆக அதிகரிக்கவும் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, தனியார் வீடுகளில் உள்ள சிசிடிவியும் அவர்களின் விருப்பப்படி பொலிஸாரால் கண்காணிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.