உலகில் மிகவும் பழைமையான ஓரங்குட்டான் இனத்தைச் சேர்ந்த பெல்லா (Bella) எனும் பெயர் கொண்ட பெண் குரங்கானது இந்த வாரம் அதன் 63ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியது.
1961ஆம் ஆண்டளவில் பிறந்ததாக மதிப்பிடப்படும் இந்த சுமத்ரன் ஓரங்குட்டான்(Pongo abelii),1964ஆம் ஆண்டு காட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டு இன்று வரையும் ஜெர்மனியின் ஹாம்பர்க்கிலுள்ள ஹேகன்பெக் உயிரியல் பூங்காவில் வாழ்ந்து வருகிறது.
“பெல்லா சிறந்த நிலையில் இருக்கிறாள்” என பூங்காவின் பணியாளர்கள் கூறியுள்ளனர். பெல்லாவின் பிறந்தநாளுக்காக வேகவைத்த அரிசி மற்றும் பழங்களால் செய்யப்பட்ட பிறந்த நாள் கேக் அவளுக்கு வழங்கப்பட்டபோது அதனை தனது வளர்ப்பு குழந்தைகளில் ஒன்றான பெரானியுடன் பகிர்ந்து கொண்டாள்.
ஒரு காட்டு ஓரங்குட்டானின் சராசரி ஆயுட்காலம் 35 – 40 வருடங்களே. அதை விட கூடினால் 50. ஓரிகான் மிருகக்காட்சிசாலையில் இருந்த சுமத்ரா பெண் ஓரங்குட்டானான இன்ஜி 2021ஆம் ஆண்டு இறந்ததையடுத்து பெல்லா உலகின் வயதான பெண் ஓரங்குட்டான் என்ற இடத்தைப் பிடித்தது.
குறித்த பூங்கா காவலர்கள், “பெல்லா மிகவும் நேர்மையானவள், விவேகமானவள், ஆர்வமுள்ளவள், புத்திசாலி, அன்பானவள், அத்தோடு ஒருபோதும் ஆக்ரோஷமாகாதவள்” என கூறுகின்றனர்.
பெல்லா ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளாள் என்பதோடு நான்கு தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கும் தாயாக இருக்கிறாள். இதனால் இவளுக்கு (சூப்பர் மாம் – Super mom) என்ற பெயரும் உண்டு. தற்போது பெல்லாவுக்கு குறைவான பற்களே காணப்படுகின்றன.
ஜேர்மனியில் பிறந்தநாளைக் கொண்டாடும் அதிகூடிய வயதான குரங்கு பெல்லா மட்டுமல்ல. உலகில் மிகவும் வயதான கொரில்லா Fatou ஏப்ரல் 13 அன்று அதன் 67 ஆவது வயதை பூர்த்தி செய்தது. Fatou 1959இல் காட்டிலிருந்து பிடிக்கப்பட்டு ஒரு மாலுமியால் பிரான்ஸுக்கு கொண்டு வரப்பட்டது.
இப்போதெல்லாம் மிருகக் காட்சிச்சாலைக்காக காட்டு விலங்குகளைப் பிடிப்பது விலங்கியல் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. பெரும்பாலான விலங்குகள் தற்போது சிறைபிடிக்கப்பட்ட நிலையில் பிறக்கின்றன அல்லது இனப்பெருக்கத்துக்காக இடையில் இடம் மாற்றப்படுபவை குறிப்பிடத்தக்கது.