மரத்தின் மேல் ஏறிய யானை: குழப்பத்தில் மக்கள்

0
41

யால தேசிய பூங்காவில் யானை ஒன்று மரத்தில் ஏறி அமர்ந்திருப்பதாக குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட படம் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படம் என்பதோடு இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் வெளியான செய்திகள் போலியானவை என Hashtag தலைமுறை உறுதி செய்துள்ளது.

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சில படங்கள் மக்கள் மத்தியில் ஒரு வகையிலான குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் அல்லது மக்களை தவறாக வழிநடத்தக்கூடிய வகையில் பகிரப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிவதாக Hashtag தலைமுறை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, யானை ஒன்று மரத்தில் ஏறி அமர்ந்திருப்பது போன்ற படங்களும் தமிழ் மற்றும் சிங்கள மொழி சமூக வலைத்தள பயனாளர்களால் கடந்த காலங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வந்தது.

குறிப்பாக யால தேசிய பூங்காவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் மற்றொரு படத்தில் இரவு நேரத்தில் யானை ஒன்று மரத்தில் ஏறி அமர்ந்திருப்பது போன்ற CCTV காட்சிகளை ஒத்த படமொன்றும் இலங்கையில் உள்ள சமூக வலைத்தள பயனர்களால் அதிகளவில் பகிரப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேற்குறித்த படங்களை Google reverse image search செய்து பார்த்தபோது, S o u l ॐ என்கிற பேஸ்புக் பக்கத்திலேயே யானை படம் ஆரம்பத்தில் விளையாட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது என Hashtag தலைமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

குறிப்பாக படத்தின் பின்னூட்டத்திலும் யானை படம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு அதாவது AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யானை ஒன்று மரத்தில் ஏறி நிற்பதுபோன்ற CCTV காட்சிகளை ஒத்த படமொன்றும் S o u l ॐ என்கிற பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில், யானை ஒன்று மரத்தில் இருப்பதுபோன்ற எந்தவொரு சம்பவங்களும் யால தேசிய பூங்காவில் பதிவாகவில்லை என்பதை பூங்கா அதிகாரிகள் Hashtag தலைமுறைக்கு உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

எவ்வாறாயினும், மேற்குறிப்பிட்ட படங்கள் AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படங்கள் என்பதை ஹேஷ்டேக் கண்டறிந்துள்ளது.

யானை மரத்தில் இருப்பது போன்ற CCTV காட்சிகளை ஒத்த படங்கள் AI CREATIVES THAILAND என்கிற தாய்லாந்தை சேர்ந்த பேஸ்புக் குழுவிலேயே முதலில் பகிரப்பட்டிருப்பதை thailand.factcrescendo Hashtag தலைமுறைக்கு உறுதி செய்துள்ளது.

இதேவேளை யானையால் மரம் ஏற முடியாது என்பதையும் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு நிபுணர்கள் பலரும் உறுதி செய்துள்ளார்கள்.